தேர்தல் பறக்கும் படை பணிகளை நள்ளிரவில் கலெக்டர் திடீர் ஆய்வு
தேர்தல் பறக்கும் படை பணிகளை நள்ளிரவில் கலெக்டர் டி.ஜி. வினய் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
திண்டுக்கல்,
நாடாளுமன்றம், சட்டமன்ற இடைத்தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி அரசியல் கட்சியினர் தங்கள் கட்சி சார்பில் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரசாரத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அரசியல் கட்சியினர் வாக்காளர்களை கவரும் வகையில் பணம், பரிசு பொருட்களை வழங்கலாம். அதனை தடுக்க அந்தந்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பரிசு, பணம் கொடுப்பதை தடுப்பதற்காக தேர்தல் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த படைகளை சேர்ந்தவர்கள் தனித்தனி குழுவாக பிரிக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு, உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம், பரிசு பொருட்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் திண்டுக்கல்லை அடுத்த தோமையார்புரம், வக்கம்பட்டி, ஆத்தூர் பிரிவு ஆகிய பகுதிகளுக்கு கலெக்டர் டி.ஜி.வினய் நேற்று முன்தினம் நள்ளிரவில் சென்றார். பின்னர் அப்பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் முறையாக வாகன சோதனை மேற்கொள்கிறார்களா? என்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் கலெக்டரே சில வாகனங்களில் பணம், பரிசு பொருட்கள் இருக்கிறதா? என்று சோதனை செய்தார்.
மேலும் வாகனங்களுக்கான ஆவணங்கள் முறையாக வைக்கப்பட்டுள்ளதா? என்றும் ஆய்வு செய்தார். அத்துடன் சரக்கு வாகனங்களையும் நிறுத்திய கலெக்டர் அதில் வைக்கப்பட்டுள்ள சரக்குகளுக்கு முறையான ஆவணம் உள்ளதா? சரக்குகளுக்கு இடையே பணம், பரிசு பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்றும் ஆய்வு செய்தார். பின்னர் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு சில அறிவுரைகளை வழங்கிவிட்டு அங்கிருந்து கலெக்டர் புறப்பட்டு சென்றார்.