சிறுவர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் உருட்டு கட்டையால் அடித்து முதியவர் படுகொலை - கட்டிட மேஸ்திரி கைது
சிறுவர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் உருட்டு கட்டையால் அடித்து முதியவர் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கட்டிட மேஸ்திரி கைது செய்யப்பட்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
சூலூர்,
கோவை மாவட்டம் சூலூரை அடுத்த தென்னம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (வயது 41). அதே பகுதியில் கணினி பழுதுபார்க்கும் மையம் நடத்தி வருகிறார். இவருக்கு கல்பனா (31) என்ற மனைவியும், சஷாந்த் (7) என்ற மகனும் உள்ளனர். இவர்களது பக்கத்து வீட்டில் வசிப்பவர் எட்வின் (48), கட்டிட மேஸ்திரி. இவருக்கு பிரபாகரன் (27), தமிழ் பிரபு (15), தமிழ்ச்செல்வன் (11), ஆகிய 3 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தென்னம்பாளையம் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் சஷாந்த் மற்றும் தமிழ்ச்செல்வன் ஆகியோர் சாமி கும்பிட்டுக்கொண்டு இருந்தனர். அப்போது சஷாந்தின் கால் எதிர்பாராதவிதமாக தமிழ்ச்செல்வன் மீது பட்டதாக தெரிகிறது. இதில் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். உடனே அருகில் இருந்தவர்கள் இருவரையும் தடுத்து அவரவர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து சஷாந்த் தனது தாய் கல்பனாவிடம் கூறினார். இந்த நிலையில் நேற்று கல்பனா தனது தந்தை நாகராஜனுடன் (60) சேர்ந்து எட்வின் வீட்டுக்கு சென்று குழந்தைகள் இடையே ஏற்பட்ட பிரச்சினை குறித்து கேட்டனர். இதில் இரு தரப்புக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த எட்வின் உருட்டு கட்டையை எடுத்து நாகராஜன் தலையில் தாக்கி உள்ளார்.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த நாகராஜன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த எட்வின் தனது மோட்டார் சைக்கிளை எடுத்து கொண்டு தப்பி சென்றுவிட்டார். இது குறித்த தகவலின் பேரில் சூலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பிச் சென்ற எட்வினை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடினர்.
எட்வினின் மூத்த மகனான பிரபாகரனிடம் போலீசார் விசாரணை செய்தனர். அப்போது சூலூரை அடுத்த கருமத்தம்பட்டியில் எட்வின் மறைந்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடித்து போலீசார் சூலூர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.
இதில் நாகராஜனை கட்டையால் தாக்கி கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சிறுவர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் முதியவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.