மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி மாணவி பலி தந்தை-தம்பி படுகாயம்

மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியதில் மாணவி பரிதாபமாக இறந்தார். அவருடைய தந்தை மற்றும் தம்பி படுகாயம் அடைந்தனர்.

Update: 2019-03-24 22:15 GMT
திருச்சி,

திருச்சி காட்டூர் கைலாஷ்நகர் பகுதியை சேர்ந்தவர் யோகேஷ்வரன்(வயது 45). இவருடைய மகள் சினேகா(18). இவர் அங்குள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து தேர்வு எழுதியிருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் தனது மகன் லிங்கேஸ்வரன்(12) மற்றும் மகள் சினேகா ஆகியோரை யோகேஷ்வரன் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு வெளியே சென்றார்.

திருச்சி தலைமை தபால் நிலையத்தில் இருந்து டி.வி.எஸ்.டோல்கேட் நோக்கி சென்றபோது, அவர்களுக்கு பின்னால் வந்த அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது திடீரென மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி 3 பேரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர்.

அருகில் இருந்தவர்கள் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே சினேகா பரிதாபமாக உயிரிழந்தார். படுகாய மடைந்த யோகேஷ்வரன், லிங்கேஸ்வரன் ஆகியோருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்த புகாரின்பேரில் தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்