தமிழகத்தில் எங்கு நின்றாலும் வெற்றி பெறுவேன்: “ஜெயலலிதாவை தனிப்பட்ட முறையில் விமர்சித்தது இல்லை” ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேட்டி
தமிழகத்தில் எந்த தொகுதியில் நின்றாலும் வெற்றி பெறுவேன் என்றும், ஜெயலலிதாவை தனிப்பட்ட முறையில் தான் என்றுமே விமர்சித்தது இல்லை என்றும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.
மதுரை,
மதுரை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:–
தமிழகத்தை பொறுத்தவரையில் அ.தி.மு.க.– பா.ஜ.க. கூட்டணியை தோற்கடிக்க மக்கள் முடிவெடுத்து விட்டனர். இது அனைவரும் அறிந்தது தான். நான் கண்டிப்பாக தேனி தொகுதியில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.
ஈரோடு, திருப்பூர் தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் தோழமை கட்சிகளுக்கு அந்த தொகுதிகளை வழங்க வேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டது. அதனால் தேனியில் போட்டியிடுகிறேன். எனக்கும், எங்கள் குடும்பத்துக்கும், தமிழக மக்களுக்கும் உள்ள தொடர்பானது மிக இறுக்கமானது. அதன் காரணமாக, நான் தமிழகத்தில் எந்த தொகுதியில் நின்றாலும், மக்கள் எனக்கு ஆதரவு அளிப்பார்கள்.
தேனி தொகுதி என்பது அ.தி.மு.க.வின் கோட்டையா என்பது வருகிற தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் தெரியவரும். முன்னாள் முதல்– அமைச்சர் ஜெயலலிதாவை மிகவும் கடுமையாக விமர்சித்துள்ளேன். அரசியல் ரீதியாக மட்டுமே அவரை விமர்சித்திருக்கிறேன். தனிப்பட்ட முறையில் ஒருமையில் இதுவரை அவரை விமர்சித்ததே கிடையாது.
ஒரு முறை அவர் சோனியாகாந்தியை விமர்சித்தபோது, சோனியாகாந்திக்கு ஆதரவாக நான் ஜெயலலிதாவை விமர்சித்தேன். என்னை பொறுத்தவரையில் அரசியலில் அவரை நான் பல இடங்களில் பல நேரங்களில் விமர்சித்து இருந்தாலும் ஒரு பெண் சாதனையாளர் என்ற முறையில் ஜெயலலிதா மீது எனக்கு மிகப் பெரிய மரியாதை உண்டு.
தேனி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத்குமார், எனக்கு தேனி மக்களையும் அங்கு நடக்கும் பஞ்சாயத்துகள் பற்றியும் எதுவும் தெரியாது என்று விமர்சித்துள்ளார். எனக்கு பஞ்சாயத்து தெரியாமல் இருக்கலாம். ஆனால் அந்த தொகுதியில் பல பிரச்சினைகள் உள்ளன. வைகையில் தூர்வாரும் பிரச்சினை, முல்லை பெரியாறு போன்ற மக்கள் பிரச்சினையில் என்னை ஈடுபடுத்தி தேனி மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.