திருவாடானையில் மனித சங்கிலி

திருவாடானையில் வாக்காளர் விழிப்புணர்வு மனித சங்கிலி மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் நடைபெற்றது.

Update: 2019-03-24 22:30 GMT
தொண்டி,

ராமநாதபுரம் நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி திருவாடானையில் வாக்காளர் விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் தலைமை தாங்கினார். தாசில்தார் சேகர் அனைவரையும் வரவேற்றார். இதில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பெண்கள், பொதுமக்கள் திருவாடானை பஸ் நிலையத்தில் இருந்து ஆதிரெத்னேசுவரர் கோவில் வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையின் இருபுறமும் கைகோர்த்து மனித சங்கிலி மூலம் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஈடுபட்டனர்.

பின்னர் வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழர் பாரம்பரிய கிராமிய கலை கருவிகளின் இசையுடன் பொதுமக்கள், பெண்கள் ஊர்வலமாக சென்றனர். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாவட்ட கலெக்டரிடம் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன. அதனை பெற்றுக்கொண்ட அவர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கெட்சி லீமா அமலினி, மாவட்ட வழங்கல் அலுவலர் மதியழகன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை, திருவாடானை தாசில்தார் சேகர், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் அமலோற்பவ ஜெயராணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஸ்டெல்லா ராஜேந்திரன், துணை தாசில்தார் சிவக்குமார், தேர்தல் துணை தாசில்தார் செந்தில்வேல் முருகன், நல்லாசிரியர் உதயகுமார், கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட தலைவர் சக்திவேல், வட்ட செயலாளர் நம்பு ராஜேஷ், ஊராட்சி செயலாளர் மீனாட்சிசுந்தரம் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதில் திணையத்தூர் கிராமிய பாடகர் கார்த்திக் ராஜாவின் தேர்தல் விழிப்புணர்வு பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும் செய்திகள்