அந்தியூர் அருகே மீண்டும் வரட்டுப்பள்ளம் அணை வாய்க்காலில் தவறி விழுந்த குட்டி யானை கரையில் சாய்வு தளம் அமைத்து மீட்பு

அந்தியூர் அருகே உள்ள வரட்டுப்பள்ளம் அணை வாய்க்காலில் மீண்டும் ஒரு குட்டி யானை தவறி விழுந்தது. வாய்க்காலின் கரை உடைக்கப்பட்டு அதில் மண்ணால் சாய்வு தளம் அமைத்து குட்டி யானை மீட்கப்பட்டது.

Update: 2019-03-24 22:30 GMT

அந்தியூர்,

ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை, மான், செந்நாய் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் வறட்சி நிலவிவருவதால் அங்குள்ள நீர்நிலைகள் முற்றிலும் வற்றிவிட்டன.

இதனால் வனவிலங்குகளின் தாகம் தீர்க்கும் ஒரே நீர் நிலையாக அந்தியூர் அருகே உள்ள வரட்டுப்பள்ளம் அணை உள்ளது. எனவே வரட்டுப்பள்ளம் அணைக்கு வனவிலங்குகள் வந்து தாகத்தை தீர்த்துக்கொள்கின்றன. வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து பாசனத்துக்காக அதன் கொப்பு வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. வாய்க்காலில் சிறிதளவே தண்ணீர் ஓடுகிறது. நேற்று முன்தினம் வரட்டுப்பள்ளம் அணையின் கொப்பு வாய்க்காலில் தண்ணீர் குடிப்பதற்காக 5 யானைகள் மற்றும் 4 மாத குட்டி யானை ஒன்றும் வந்தது. அப்போது அந்த குட்டி யானை வாய்க்காலில் தவறி விழுந்து விட்டது. மேலும் குட்டி யானையால் வாய்க்காலில் இருந்து கரைக்கு ஏற முடியவில்லை. இதுபற்றி அறிந்ததும் அந்தியூர் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று அந்த குட்டி யானையை மீட்டனர்.

இந்த நிலையில் 10–க்கும் மேற்பட்ட யானைகள் வரட்டுப்பள்ளம் அணை வாய்க்காலுக்கு நேற்று காலை 8 மணி அளவில் தண்ணீர் குடிக்க வந்தன. அதில் 7 மாத குட்டி யானை ஒன்றும் வந்தது. அப்போது அந்த குட்டி யானை வாய்க்காலில் தவறி விழுந்து விட்டது. இதனால் அது பிளிறியது. மேலும் தாய் யானையும் மற்ற யானைகளும் அங்கு கூட்டமாக நின்று கொண்டு அந்த குட்டி யானையை துதிக்கையால் தூக்க முயன்றன.

ஆனால் அந்த குட்டி யானையால் கரைக்கு வரமுடியவில்லை. இதை பார்த்ததும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அந்தியூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்ததும் அந்தியூர் வனச்சரகர் பாலகிருஷ்ணன் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களுடன் சேர்ந்து குட்டி யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால் யாரையும் அங்கு நின்ற யானைகள் வரவிடாமல் துரத்த தொடங்கின. இதனால் பட்டாசு வெடித்து யானைகளை அங்கிருந்து விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் யானைகள் பிளிறியபடியே வனத்துறையினரையும், பொதுமக்களையும் விரட்டியது. இதனால் வனத்துறையினரும், பொதுமக்களும் தலைதெறிக்க ஓடினர். பின்னர் வனத்துறையினர் சுதாரித்துக்கொண்டு தொடர்ந்து பட்டாசு வெடித்தபடியே இருந்தனர். இதனால் யானைகள் அங்கிருந்து வனப்பகுதிக்கு சென்றன. ஆனால் தாய் யானை மட்டும் போவதும், வருவதுமாக போக்கு காட்டிக்கொண்டிருந்தது. பின்னர் தாய் யானையையும், வனத்துறையினர் பட்டாசு வெடித்து விரட்டினர்.

இதைத்தொடர்ந்து வனத்துறையினரும், பொதுமக்களும் வாய்க்காலுக்குள் இறங்கி குட்டி யானையை தூக்க முயன்றனர். ஆனால் அவர்களால் அந்த குட்டி யானையை தூக்க முடியவில்லை. இதனால் பொக்லைன் எந்திரம் கொண்டு வரப்பட்டு கொப்பு வாய்க்காலின் கான்கிரீட் கரை உடைக்கப்பட்டு அங்கு மண்ணால் சாய்வு தளம் அமைக்கப்பட்டது. இதையடுத்து அந்த குட்டி யானை அதில் ஏறி பகல் 11.30 மணி அளவில் கரைக்கு வந்தது. பின்னர் அந்த குட்டி யானை வனப்பகுதியை நோக்கி ஓடியது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்