தஞ்சை மாவட்டத்தில் 4 மாதங்களுக்கு மேலாக முடங்கி கிடக்கும் மீன்பிடி தொழில்

தஞ்சை மாவட்டத்தில் 4 மாதங்களுக்கு மேலாக மீன்பிடி தொழில் முடங்கி கிடக்கிறது. கூடுதல் நிவாரணம் கிடைக்குமா? என மீனவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Update: 2019-03-24 23:00 GMT
சேதுபாவாசத்திரம்,

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கானோர் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த ஆண்டு (2018) நவம்பர் மாதம் 15-ந் தேதி வீசிய கஜா புயலில் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம் ஆகிய இடங்களில் உள்ள மீன்பிடி துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகுகள் சேதம் அடைந்தன. இதில் பல படகுகள் மீண்டும் சீரமைக்க முடியாதபடி சுக்கு நூறாக உடைந்து விட்டன.

பகுதி அளவு சேதம் அடைந்த படகுகளுக்கும், முழு அளவு சேதம் அடைந்த படகுகளுக்கும் தமிழக அரசு தனித்தனியாக நிவாரணத்தொகை வழங்கியது. இந்த நிவாரணத்தொகை படகுகளை சீரமைக்க போதுமானதாக இல்லை என்பதால் மீனவர்கள் பலர், தொழிலுக்கு திரும்ப முடியாமல் உள்ளனர். இதனால் தஞ்சை மாவட்டத்தில் 4 மாதங்களுக்கும் மேலாக மீன்பிடி தொழில் முடங்கி கிடக்கிறது.

இதுகுறித்து மீனவர்கள் கூறியதாவது:-

சேதம் அடைந்த படகுகளுக்கு அரசு வழங்கி உள்ள நிவாரணம் போதுமானதாக இல்லை. ஒரு சிலர் மட்டுமே படகுகளை சீரமைத்துள்ளோம். பெரும்பாலானோர் கடலுக்கு சென்று மீன்பிடி தொழிலை தொடர்ந்து செய்ய முடியாமல் அவதிப்பட்டு வருகிறோம். தஞ்சை மாவட்டத்தில் மீன்பிடி தொழில் முன்புபோல மீண்டும் எப்போது நடக்கும் என தெரியவில்லை.

எங்களுக்கு மாற்று தொழில் தெரியாது. எனவே கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களுக்கும், கேரளா போன்ற மாநிலங்களுக்கும் மீன்பிடி வேலைக்கு செல்ல வேண்டிய நிலையில் இருக்கிறோம். எனவே அரசு உடனடியாக கூடுதல் நிவாரணத்தொகை வழங்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு மீனவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்