மண்டியா நாடாளுமன்ற தொகுதியில் என்னை தோற்கடிக்க ‘சதி’ நிகில் குமாரசாமி குற்றச்சாட்டு
மண்டியா நாடாளுமன்ற தொகுதியில் என்னை தோற்கடிக்க சதி நடக்கிறது என்று நிகில் குமாரசாமி கூறியுள்ளார்.
பெங்களூரு,
மண்டியா நாடாளுமன்ற தொகுதியில் ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் முதல்-மந்திரி குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து சுயேச்சை வேட்பாளராக நடிகர் அம்பரீசின் மனைவி சுமலதா களத்தில் குதித்துள்ளார். அவருக்கு நடிகர்கள் தர்ஷன், யஷ் மற்றும் சில கன்னட நடிகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் மண்டியா காங்கிரஸ் தலைவர்களும் சுமலதாவுக்கு ஆதரவு தெரிவித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மண்டியா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் சுமலதாவுக்கு பா.ஜனதா கட்சி ஆதரவு தெரிவித்திருப்பதுடன், அங்கு பா.ஜனதா சார்பில் வேட்பாளரை நிறுத்தவில்லை. இதனால் சுமலதாவுக்கு தொடர்ந்து ஆதரவு அதிகரித்து வருகிறது. இதுபற்றி மண்டியா தொகுதி ஜனதாதளம்(எஸ்) வேட்பாளர் நிகில் குமாரசாமியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-
மண்டியா தொகுதியில் கூட்டணி கட்சிகள் சார்பில் நான் போட்டியிடுகிறேன். சுயேச்சை வேட்பாளர் சுமலதாவுக்கு பா.ஜனதா ஆதரவு தெரிவித்திருப்பதால், எனக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. மண்டியா தொகுதியில் என்னை தோற்கடிக்க சதி நடக்கிறது. எனக்கு எதிராக சில சக்திகள் ஒன்று சேர்ந்துள்ளன. அதுபற்றி நான் கவலைப்பட போவதில்லை. என்னுடைய வேலையை செய்து கொண்டிருக்கிறேன். எனக்கு எதிராக எந்த சக்திகள் ஒன்று சேர்ந்தாலும், மண்டியா மக்கள் என்னுடன் இருக்கிறார்கள். அவர்கள் என்னை கைவிட மாட்டார்கள்.
என்னை தோற்கடிக்க நினைக்கும் அனைவருக்கும் நல்லதே நடக்க வேண்டும் என்று விரும்புகிறேன். யார் மீதும் குற்றச்சாட்டு கூற விரும்பவில்லை. மண்டியா தொகுதியில் நடக்கும் அனைத்து சம்பவங்களையும் மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். அவர்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். மண்டியா மக்கள் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளேன்.
இவ்வாறு நிகில் குமாரசாமி கூறினார்.