நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 22 தொகுதிகளில் வெற்றி பெற்றால் கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி கவிழும் எடியூரப்பா பேட்டி

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 22 தொகுதிகளில் வெற்றி பெற்றால், கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி கவிழும் என்று எடியூரப்பா கூறினார்.

Update: 2019-03-24 23:30 GMT
பெங்களூரு, 

கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் பா.ஜனதா பலமான கட்சியாக உள்ளது. குறிப்பாக மும்பை-கர்நாடக பகுதியில் பா.ஜனதா நல்ல பலத்துடன் உள்ளது. ஐதராபாத்-கர்நாடக பகுதியிலும் எங்கள் கட்சி செல்வாக்குடன் திகழ்கிறது.

கர்நாடகத்தில் 20 முதல் 22 தொகுதிகளில் எங்கள் கட்சி வெற்றி பெற்றால், மோதல் ஏற்பட்டு கூட்டணி ஆட்சி கவிழும். நாடு முழுவதும் பா.ஜனதாவுக்கு சாதகமான சூழல் நிலவுகிறது. மோடி அலை, கடந்த நாடாளுமன்ற தேர்தலை விட இந்த முறை கட்சியின் பலத்தை அதிகரித்துள்ளது.

மேற்கு வங்கம், ஒடிசா, வட கிழக்கு மாநிலங்களில் எங்கள் கட்சிக்கு புதிய பலம் கிடைக்கும். கடந்த முறை அந்த தொகுதிகளில் பா.ஜனதாவின் வெற்றி மிக குறைவாக இருந்தது. இதன் மூலம் பா.ஜனதா நாடாளுமன்ற தேர்தலில் 300-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.

தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களிலும் எங்கள் கட்சிக்கு குறிப்பிடத்தக்க வெற்றி கிடைக்கும். கேரளாவிலும் எங்கள் கட்சி வெற்றி கணக்கை தொடங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. ராஜஸ்தான், மத்தியபிரதேச சட்டமன்ற தேர்தலில் எங்கள் கட்சி தோல்வி அடைந்தது.

ஆனால் இந்த நாடாளுமன்ற தேர்தலில் அந்த மாநிலங்களில் கடந்த நாடாளுமன்ற தேர்தலை போலவே நல்ல வெற்றி கிடைக்கும். பா.ஜனதாவின் நிலை கர்நாடகத்தில் நன்றாகவே உள்ளது. துமகூரு, மைசூரு ஆகிய தொகுதிகளில் நாங்கள் நல்ல நிலையில் இருக்கிறோம்.

ஹாசனில் கடும் போட்டியை கொடுப்போம். ஐதராபாத்-கர்நாடக பகுதியில் எங்கள் கட்சி நல்ல வளர்ச்சியை கண்டுள்ளது. காங்கிரசில் இருந்து மாலிகையா குத்தேதார், பாபுராவ் சின்சனசூர், மாலகரெட்டி ஆகியோரின் வருகையால், கலபுரகி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மல்லிகார்ஜுன கார்கே தோல்வி அடைவார். மத்திய கர்நாடக பகுதியிலும் எங்கள் கட்சி பலம் வாய்ந்ததாக திகழ்கிறது.

கர்நாடகத்தில் பிரதமர் மோடி மேற்கொள்ளும் பிரசாரம் மூலம், பா.ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெறும். கர்நாடகத்தில் 4 தேர்தல் பிரசார கூட்டங்களில் கலந்து கொண்டு பேசுமாறு மோடியிடம் கூறி இருக்கிறோம். இடம், தேதி இன்னும் முடிவு செய்யவில்லை.

அமேதி தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் ஸ்மிரிதி இரானிக்கு எதிராக ராகுல் காந்தி வெற்றி பெறுவது கடினம். அதனால் அவரை கர்நாடகத்தில் போட்டியிடுமாறு இங்குள்ள தலைவர்கள் கேட்கிறார்கள். கர்நாடகத்தில் ராகுல் காந்தி போட்டியிட்டால், அவர் வெற்றி பெறுவது கடினம். இந்த அபாயமான முடிவை அவர் எடுக்க மாட்டார் என்று நான் நினைக்கிறேன்.

சிவமொக்கா தொகுதியில் எனது மகன் பி.ஒய்.ராகவேந்திரா, ஒரு லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். கடந்த 6 மாதமாக அவர் ஓய்வே எடுக்காமல் அந்த தொகுதியில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இன்னும் 2, 3 நாட்களில் நான் தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளேன்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

மேலும் செய்திகள்