பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனை: சேலம், கெங்கவல்லியில் ரூ.3.69 லட்சம் பறிமுதல்

சேலம், கெங்கவல்லி பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் ரூ.3.69 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2019-03-24 22:30 GMT

சேலம், 

சேலம் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

அதன்படி சேலம் ஜங்‌ஷன் ரெயில் நிலையம் அருகே நேற்று முன்தினம் இரவு தேர்தல் கண்காணிப்புக்குழு அதிகாரி பாலுமகேந்திரன் தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஒருவர் கைப்பையுடன் சென்னைக்கு செல்வதற்காக ஜங்‌ஷன் ரெயில் நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அவர் வைத்திருந்த பையில் ரூ.1 லட்சத்து 12 ஆயிரம் இருப்பது தெரியவந்தது. அந்த பணம் எப்படி கிடைத்தது? என அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அதற்கு அவர், தனது பெயர் ஹாஸ்முக் நாதர் என்றும், கண்ணாடி வியாபாரம் செய்து வரும் நான் சென்னையில் வசிப்பதாகவும் தெரிவித்தார். வியாபாரம் நிமித்தமாக சென்னையில் இருந்து சேலத்திற்கு வந்ததாகவும், இங்கு கண்ணாடி விற்றதில் கிடைத்த பணத்தை எடுத்துக்கொண்டு மீண்டும் இரவு ரெயில் மூலமாக சென்னைக்கு செல்வதற்காக வந்தேன். ஆனால் பணத்திற்கு உரிய ஆவணங்கள் என்னிடம் இல்லை என்று அதிகாரிகளிடம் ஹாஸ்முக்நாதர் தெரிவித்தார். இதையடுத்து ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து அதை சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

ஏற்காடு அடிவாரம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மாடர்ன் தியேட்டர் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த ரமேஷ் என்பவரை நிறுத்தி சோதனை செய்தபோது, அவரிடம் ரூ.1 லட்சத்து 49 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பழ வியாபாரியான அவரிடம் ரூ.1 லட்சத்து 49 ஆயிரத்திற்கான ஆவணம் ஏதும் இல்லை. இதனால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல், கெங்கவல்லி அருகே ஒதியத்தூர் சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி செல்வராஜ் தலைமையில் அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக அரியலூரில் இருந்து சேலம் நோக்கி வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், அரியலூரை சேர்ந்த அருள்ராஜ் (வயது 23) என்பவர் ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் வைத்திருப்பது தெரியவந்தது. அரியலூரில் மளிகை கடை வைத்திருப்பதாகவும், அதற்காக சேலம் செவ்வாய்பேட்டையில் மளிகை சாமான் வாங்குவதற்காக பணத்தை எடுத்து செல்வதாகவும் கூறினார். ஆனால் அதற்கான உரிய ஆவணங்கள் ஏதும் அவரிடம் இல்லை. இதனால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து கெங்கவல்லி தேர்தல் அதிகாரியான முருகையனிடம் ஒப்படைத்தனர்.

சேலம், கெங்கவல்லி பகுதியில் நடந்த வாகன சோதனையில் மொத்தம் ரூ.3 லட்சத்து 69 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்