அரியமங்கலத்தில் பரபரப்பு அ.தி.மு.க. முன்னாள் பெண் கவுன்சிலர் வீட்டில் மர்ம பொருள் வெடித்தது

அரியமங்கலத்தில் உள்ள அ.தி.மு.க. முன்னாள் பெண் கவுன்சிலர் வீட்டில் மர்ம பொருள் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-03-23 22:30 GMT
பொன்மலைப்பட்டி,

திருச்சி அரியமங்கலம் அண்ணாநகரை சேர்ந்தவர் சேகர். இவர் அ.தி.மு.க.வில் பொன்மலை பகுதி செயலாளராக இருந்தார். பன்றி வளர்ப்பு மற்றும் கேபிள் தொழிலில் ஈடுபட்டு வந்த சேகர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார்.

இவருடைய மனைவி கயல்விழி திருச்சி மாநகராட்சியில் அ.தி.மு.க. கவுன்சிலராக 2 முறை பதவி வகித்துள்ளார். தற்போது, தனது இரு மகன்களுடன் வசித்துவரும் இவர், தனது கணவர் விட்டு சென்ற தொழிலை தொடர்ந்து கவனித்து வருகிறார். இவருடைய வீட்டிற்கு வெளியே சிமெண்டு சீட்டால் ஆன மேற்கூரை கொண்ட ஒரு அறை உள்ளது.

அந்த அறையில் கயல்விழி பழைய பொருட்களை போட்டு வைத்திருந்தார். இந்தநிலையில் நேற்று மதியம் 2 மணியளவில் அந்த அறையில் இருந்து பயங்கர சத்தத்துடன் மர்ம பொருள் வெடித்தது. இதில் மேற்கூரை உடைந்தது. அத்துடன் அருகில் உள்ள வீடுகளின் ஜன்னல்களும் உடைந்தன.

சத்தம் கேட்டு அந்த பகுதியில் உள்ளவர்கள் கயல்விழியின் வீட்டின் முன் திரண்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இதுபற்றி தகவல் அறிந்த பொன்மலை போலீஸ் உதவி கமிஷனர் பாலமுருகன் தலைமையில் அரியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தரசு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் அந்த அறையில் வைக்கப் பட்டிருந்த நீலநிற பிளாஸ்டிக் தொட்டியில் இருந்த மர்ம பொருள் தான் வெடித்து சிதறியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வெடி குண்டு நிபுணர்கள், தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அங்கு வெடித்து சிதறிய மர்ம பொருளின் துகள்களை சேகரித்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து அரியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுபற்றி பொன்மலை போலீஸ் உதவி கமிஷனர் பாலமுருகனிடம் கேட்ட போது, முன்னாள் பெண் கவுன்சிலர் வீட்டில் என்ன பொருள் வெடித்தது என்று உறுதியாக கூறமுடிய வில்லை. அங்கு வெடித்து சிதறிய மர்ம பொருளின் துகள்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த ஆய்வறிக்கை வந்த பிறகுதான் அதுபற்றி கூறமுடியும், என்றார். 

மேலும் செய்திகள்