‘தேர்தல் பிரசாரத்துக்காக கிராமத்துக்குள் நுழைய கூடாது’ அரசியல் கட்சியினருக்கு, பொதுமக்கள் எச்சரிக்கை

‘குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தராததால் தேர்தல் பிரசாரத்துக்காக அரசியல் கட்சியினர் தங்களது கிராமத்துக்குள் நுழையக்கூடாது‘ என்று பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2019-03-23 21:11 GMT
செம்பட்டி,

செம்பட்டியை அடுத்த சீவல்சரகு ஊராட்சிக்கு உட்பட்ட பொம்மனம்பட்டி கிராமத்தில் 40 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கிற மக்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக ஆதிலட்சுமிபுரம்-சின்னாளப்பட்டி செல்லும் சாலை படுமோசமாக காட்சி அளிக்கிறது.

இந்த சாலை, கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டதாகும். ஆனால் போதிய பராமரிப்பு பணி மேற்கொள்ளாததால் குண்டும், குழியுமாகி விட்டது. இதனை சீரமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் விடுத்த கோரிக்கை கிணற்றில் போட்ட கல்லாகவே இருக்கிறது. இதேபோல் பொம்மனம்பட்டி கிராமத்துக்கு கடந்த 3 மாதங்களாக சீரான குடிநீர் வினியோகம் செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

குடிநீர், சாலை வசதி செய்து கொடுக்காததை கண்டித்து அந்த கிராம மக்கள் தங்களது வீடுகள், தெருக்களில் கருப்பு கொடி கட்டியுள்ளனர். பொம்மனம்பட்டி பிரிவிலும் கருப்பு கொடியை கட்டி எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கவும் முடிவு செய்துள்ளனர்.

இதுமட்டுமின்றி தேர்தல் பிரசாரத்துக்காக யாரும் தங்களது கிராமத்துக்குள் வரக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதையும் மீறி அரசியல் கட்சியினர் கிராமத்துக்கு வந்தால், சாலையின் குறுக்கே முட்செடிகளை வெட்டி போட்டு எதிர்ப்பு தெரிவிப்போம் என்று கிராம மக்கள் கூறுகின்றனர். இதற்கிடையே காலிக்குடங்கள், கருப்பு கொடியுடன் கிராம மக்கள் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து அந்த கிராம மக்கள் கூறும்போது, எங்களது கிராமத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பலதடவை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதேபோல் சேதமடைந்த சாலையை சீரமைக்கவில்லை. இதனால் அடிக்கடி விபத்து நடந்து வருகிறது. அடிப்படை வசதி செய்து தராததால் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். வேட்பாளர்களை கிராமத்துக்குள் வர விட மாட்டோம். ஓட்டு கேட்டு யாரும் வரக்கூடாது என எச்சரிக்கை பலகை வைக்க உள்ளோம். மேலும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டமிட்டு இருக்கிறோம் என்றனர்.

மேலும் செய்திகள்