புதுவையில் டெங்கு காய்ச்சல் பரவுகிறது

புதுவையில் சமீப காலமாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது.;

Update: 2019-03-23 22:45 GMT

புதுச்சேரி,

புதுவையில் கடந்த 2017–ம் ஆண்டு டெங்கு காய்ச்சல் காரணமாக ஏராளமானவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். நன்னீரில் உற்பத்தியாகும் கொசுக்களால் இந்த டெங்கு காய்ச்சல் பரவும் என்பதால் அந்த கொசுக்களை ஒழிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

குறிப்பாக காலிமனைகளில் தண்ணீர் தேங்கியிருந்தால் அந்த மனைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பது, காலிமனைகளை மண்போட்டு நிரப்புவது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அரசின் அதிரடி நடவடிக்கைகளினால் டெங்கு காய்ச்சல் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டது.

அதேபோல் கடந்த ஆண்டும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் விளைவாக டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் இருந்தது. தற்போது கடுமையான வெயில் தாக்கி வரும் நிலையில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது.

நாள்தோறும் 10–க்கும் மேற்பட்டவர்கள் இந்த டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. புதுவை அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் அவர்கள் சிகிச்சை பெறுகின்றனர்.

இதுதொடர்பாக புதுவை அரசு ஆஸ்பத்திரியின் உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி டாக்டர் ரவி கூறியதாவது:–

புதுவையை பொறுத்தவரை டெங்கு காய்ச்சல் என்பது கட்டுக்குள்ளாகவே உள்ளது. இந்த காய்ச்சல் பெரும்பாலும் மழைக்காலங்களிலேயே பரவும். ஆனால் தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ளது.

இருந்தபோதிலும் ஒருசிலர் டெங்கு காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரியில் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு டாக்டர் ரவி கூறினார்.

மேலும் செய்திகள்