திருப்பூர், மடத்துக்குளத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.11¼ லட்சம் பறிமுதல் அதிகாரிகள் நடவடிக்கை

திருப்பூர், மடத்துக்குளத்தில் நடந்த வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.11¼ லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2019-03-23 22:30 GMT

திருப்பூர்,

நாடாளுமன்ற தேர்தல் அடுத்தமாதம் (ஏப்ரல்) 18–ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு அவை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணத்தை நிலை கண்காணிப்பு குழு அதிகாரிகள், பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.

இதன்படி திருப்பூர் மாவட்டத்தில் இந்த குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் திருப்பூர்–ஊத்துக்குளி ரோடு மண்ணரை சோதனை சாவடியில் திருப்பூர் வடக்கு மண்டல தேர்தல் பறக்கும்படை அதிகாரி தனஜெயந்தி தலைமையில் அதிகாரிகளும், போலீசாரும் நேற்று காலையில் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை தடுத்து நிறுத்தி அதில் சோதனையிட்டனர். இந்த சோதனையில் அந்த காரில் கட்டுக்கட்டாக ரூ.7 லட்சம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பணத்திற்கான ஆவணங்களை காண்பிக்கும்படி காரை ஓட்டிவந்தவரிடம் அதிகாரிகள் கூறினார்கள். ஆனால் அந்த பணத்திற்கான உரிய ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை.

இதுகுறித்து அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் ஊத்துக்குளி ரெயில் நிலையம் பகுதியை சேர்ந்த அருண்குமார்(வயது 30) என்பதும், இவர் அதே பகுதியில் பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவனத்தை வைத்து நடத்தி வருவதும், நிறுவனத்தில் இருந்து பணத்தை திருப்பூரில் உள்ள வீட்டிற்கு எடுத்து வரும் போது அதிகாரிகளிடம் சிக்கியதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் திருப்பூர் வடக்கு தாசில்தார் ஜெயக்குமாரிடம் ஒப்படைத்தனர்.

இதுபோல் திருப்பூர் தெற்கு நிலை கண்காணிப்புக்குழு அதிகாரி கவுரிசுந்தரம் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் போலீசார் நல்லூர் ஈஸ்வரன்கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை தடுத்து நிறுத்தி அவர்கள் சோதனையிட்டனர். அப்போது அந்த காரில் ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்தது தெரியவந்தது.

இதுகுறித்த விசாரணையில், பணத்தை கொண்டுவந்த நபர் திருப்பூர் காந்திநகர் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ்(48) என்பதும், அவர் அருகில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலைபார்த்து வருவதும், தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக இந்த பணத்தை எடுத்து சென்று கொண்டிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன்படி நேற்று திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் மொத்தம் ரூ.8 லட்சத்து 25 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுபோல் மடத்துக்குளம் அருகே உள்ள குமரலிங்கம் –உடுமலை சாலையில் ஒரு பெட்ரோல் விற்பனை நிலையம் அருகில் தேர்தல் கண்காணிப்பு பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். இதில் ரூ.3 லட்சம் இருந்தது தெரியவந்தது. ஆனால் அதற்கான ஆவணங்கள் எதுவும் இல்லை. விசாரணையில் காரில் வந்தவர் வர்கீஸ் என்பதும், அவர் உரிய ஆவணங்கள் ஏதுமின்றி பணத்தை கொண்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து ரூ.3 லட்சத்தை தேர்தல் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட ரூ.3 லட்சத்தை மடத்துக்குளம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் பழனியம்மாளிடம் தேர்தல் பறக்கும் படை பிரிவை சோர்ந்த சுனில் மற்றும் துணை தாசில்தார் சுப்பிரமணியம், தலைமையிடத்து துணை தாசில்தார் அருள் ஆகியோர் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்