மத்திய, மாநில அரசுகள் மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர்: 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் சேலத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு

மத்திய, மாநில அரசுகள் மீது மக்கள் வெறுப்பில் உள்ளதால் 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்று சேலத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.;

Update: 2019-03-23 00:46 GMT
சேலம்,

சேலம் கோட்டை மைதானத்தில் நேற்று தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சேலம் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபனை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசும் போது கூறியதாவது:-

நேற்று முன்தினம் தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்த ஊரான திருவாரூரில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினேன். அதன் பிறகு அவர் வளர்ந்த தஞ்சையில் பிரசாரம் செய்தேன். இன்று சேலத்துக்கு வந்திருக்கிறேன். நாடும் நமதே, நாற்பதும் நமதே என்ற முழக்கத்தை அடிப்படையாக வைத்துக் கொண்டு இந்த பயணத்தை நடத்தி கொண்டிருக்கிறேன்.

செல்கிற இடமெல்லாம் ஆர்வத்தோடு, ஆரவாரத்தோடு, எழுச்சியோடு, உணர்ச்சியோடு ஒன்றையொன்று மிஞ்சக்கூடிய அளவிற்கு போட்டிபோட்டுக்கொண்டு மக்கள் திரள்வதை பார்க்கும் போது நிச்சயமாக, உறுதியாக வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி தான் வெற்றிப்பெற போகிறது என்பதை தெளிவாக சொல்லி கொண்டிருக்கிறது.

இதற்கு காரணம் நம் மீது மக்கள் கொண்டிருக்கிற நம்பிக்கையை எடுத்து காட்டிக்கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்ல மத்தியில் ஆட்சி பொறுப்பில் இருக்கக்கூடிய பா.ஜனதா மீதும், மாநிலத்தில் ஆட்சி பொறுப்பில் இருக்கக்கூடிய அ.தி.மு.க. ஆட்சி மீதும் மக்கள் வெறுப்பில் உள்ளனர்.

இந்த கோட்டை மைதானம் நிரம்பி வழிகிற காட்சியை பார்க்கும் போது சென்னை கோட்டையிலே தி.மு.க. ஆட்சி உதயமாக போகிறது என்பதற்கு அடையாளமாக இது விளங்கி கொண்டிருக்கிறது. திராவிட முன்னேற்ற கழகத்தின் கோட்டை தான் சேலம் என்பதை நாம் மறந்துவிட முடியாது. சேலத்தை தி.மு.க. கோட்டையாக்கி தந்தவர் மறைந்த வீரபாண்டி ஆறுமுகம் என்பதை நான் நினைவுப்படுத்த விரும்புகிறோம். அவர் சேலத்தை கோட்டையாக்கிவிட்டு நம்மிடத்தில் ஒப்படைத்துவிட்டு போய் இருக்கிறார்.

வீரபாண்டி ஆறுமுகம் போன்று பலரை தமிழ்நாடு முழுவதும் கருணாநிதி உருவாக்கி தந்திருக்கிறார். சட்டமன்ற தேர்தல்களில் தோல்வி என்பதை அறியாமல் தொடர்ந்து வெற்றிகளை பெற்றவர் கருணாநிதி. அப்படிபட்டவரின் வெற்றி சின்னம் தான் உதயசூரியன். அந்த வெற்றி சின்னமான உதயசூரியன் சின்னத்தில் யார் போட்டியிட்டாலும் கருணாநிதியே போட்டியிடுகிறார் என்று தான் அர்த்தம் என்பதை நீங்கள் மனதில் பதிய வைத்து கொள்ள வேண்டும்.

எஸ்.ஆர்.பார்த்திபனை நீங்கள் வெற்றி பெற வைக்கிறீர்கள் என்றால் உதயசூரியனை உருவாக்கிய அண்ணா, அவருடைய தம்பி கருணாநிதி, இந்த இயக்கத்தின் தலைவராக உள்ள நான் ஆகியோர் வெற்றி பெற்றிருக்கிறோம் என்பது பொருள். உதயசூரியன் உதித்த பின்னர் தான் இந்த தமிழ் சமுதாயம் வெளிச்சத்தை பார்த்துள்ளது. திராவிட இயக்கத்துக்கு அடித்தளம் அமைத்தது சேலம் தான் என்று நான் பெருமையோடு குறிப்பிடுகிறேன். கருணாநிதியின் வாழ்க்கையிலும் இந்த சேலம் மறக்க முடியாத ஊர் ஆகும். கருணாநிதியை கதாசிரியராக உருவாக்கிய பெருமை இந்த சேலத்துக்கு உண்டு என்பதை இங்கு பதிவு செய்கிறேன்.

தி.மு.க. எப்போது எல்லாம் ஆட்சி பொறுப்பில் இருந்திருக்கிறதோ அப்போது எல்லாம் சாமானிய மக்களுக்காக எத்தனையோ திட்டங்களை கொண்டு வந்துள்ளது. ரூ.1,553 கோடி செலவில் சேலம் உருக்காலை விரிவாக்கம், சேலத்தில் புதிய ரெயில்வே மண்டலம், சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி, ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் என பல எண்ணற்ற திட்டங்களை ஆட்சி பொறுப்பில் இருக்கும் போது செயல்படுத்தி கொடுத்துள்ளோம்.

ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் செய்ததாக ஒரு திட்டத்தை கூட சொல்ல முடியாது. அவர்கள் செய்தது சாதனை அல்ல, வேதனையாக தான் இருக்கிறது. கோடநாட்டில் கொள்ளை, கொலை, குட்கா ஊழல், மொத்த ஒப்பந்தங்களையும் தனது பினாமிக்கு கொடுப்பது, தூத்துக்குடியில் 13 பேர்களை சுட்டுக்கொன்றது, பொள்ளாச்சியில் நடந்த பாலியல் சம்பவத்தில் ஆளுங்கட்சி ஈடுபட்டிருப்பதை மூடி மறைப்பது, தெர்மாகோல் விஞ்ஞானத்தை கண்டுபிடித்தது உள்ளிட்டவை தான் அவர்களுடைய சாதனைகள் ஆகும்.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் கோடநாடு பங்களா அருகே 5 கொலைகள் நடந்துள்ளன. கோடநாட்டில் உள்ள ரூ.2 ஆயிரம் கோடி மற்றும் முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் செய்த தவறுகள், ஊழல்கள் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய ஆதார ரகசியங்களை கொண்டு வருவதற்காக தான் இந்த சம்பவங்கள் நடந்துள்ளன. இதற்காக கேரளாவில் இருந்து 11 பேர் கூலிப்படையாக அழைத்து வரப்பட்டனர். கோடநாடு விவரங்களை கூலிப்படையை சேர்ந்த சயன் என்பவரே கூறி உள்ளார். தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வருகிற நேரத்தில் இந்த உண்மைகளை கண்டறிந்து தண்டனைக்குரியவர்களை சிறையில் அடைப்பது தான் முதல் வேலையாக இருக்கும். மேலும் இந்த பிரச்சினை தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தப்படும் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவித்து இருக்கிறோம்.

அ.தி.மு.க. ஆட்சியில் முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீது ஊழல் புகார்கள் உள்ளன. இந்த புகார்களை அனைத்தும் மக்களிடம் தருகிறோம். இதை பரிசீலித்து அவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்றால் தி.மு.க. வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும்.

எடப்பாடி பழனிசாமிக்கு மணி அடிக்கும் பூசாரியாக ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் உள்ளனர். நம்முடைய கூட்டணி தேர்தலுக்காக அமைந்த கூட்டணி என்று கருதவேண்டிய அவசியமில்லை. இது கொள்கை கூட்டணி ஆகும். ஆனால் எதிரணி கூட்டணியை பொருத்தவரைக்கும் பேரத்தின் அடிப்படையில் நடந்திருக்கிறது. இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

சென்னை-சேலம் 8 வழி பசுமை சாலை திட்டத்துக்கு சேலம் உள்பட 5 மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் இந்த திட்டம் ரத்து செய்யப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கூறி இருக்கிறோம். ‘நீட்‘ தேர்வு ரத்து செய்யப்படும் என்று அ.தி.மு.க. அறிவித்துள்ளது. ஆனால் அதற்கான பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகின்றனர். மேலும் அடுத்த ஆண்டுக்கு நீட் தேர்வு தயார் ஆகிவிட்டது என்ற தகவல் வந்துள்ளது. ஆகையால் பிரதமர் மோடியும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் மக்களை ஏமாற்றி வருகின்றனர். நாடு நலம்பெற தி.மு.க. வேட்பாளரை வெற்றிபெற செய்யுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில், காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர் தங்கபாலு, தி.மு.க. மத்திய மாவட்ட செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா, மேற்கு மாவட்ட செயலாளர் சிவலிங்கம், தேர்தல் பணிக்குழு செயலாளர் செல்வகணபதி, வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ரெயின்போ நடராஜன், நாராயணபாளையம் ஊராட்சி செயலாளர் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பா.ம.க. முன்னாள் எம்.எல்.ஏ. தமிழரசு உள்பட ஏராளமானவர்கள் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.

மேலும் செய்திகள்