மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல், என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பலி - நெய்வேலியை சேர்ந்தவர்

மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியதில் நெய்வேலியை சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பலியானார்.

Update: 2019-03-22 22:15 GMT
வானூர்,

கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியை சேர்ந்தவர் ராஜன். இவரது மகன் பாரதி ரஞ்சன்(வயது 19). சென்னையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார். இவரது கல்லூரி நண்பரான கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் அமல் ஜெபஸ்டின்(20). இவர்கள் 2 பேரும் சென்னையில் இருந்து மோட்டார் சைக்கிளில் நெய்வேலியில் உள்ள பாரதி ரஞ்சன் வீட்டிற்கு சென்றனர்.

பின்னர் அங்கிருந்து நேற்று மாலை சென்னைக்கு புறப்பட்டு சென்றனர். மோட்டார் சைக்கிளை பாரதிரஞ்சன் ஓட்டினார். அமல் ஜெபஸ்டின் பின்னால் அமர்ந்திருந்தார். இரவு 7 மணியளவில் கிழக்கு கடற்கரை சாலையில் பெரியமுதலியார்சாவடி அருகே சென்றபோது சென்னையில் இருந்து புதுவை நோக்கி வந்த தனியார் பஸ் எதிர்பாராத விதமாக பாரதி ரஞ்சன் ஒட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த 2 பேரையும், அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி பிம்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பாரதிரஞ்சன் பரிதாபமாக இறந்தார். அமல் ஜெபஸ்டினுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்த புகாரின் பேரில் கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

மேலும் செய்திகள்