நெல்லை அருகே, குடிநீர் தட்டுப்பாட்டால் மக்கள் கடும் அவதி
நெல்லை அருகே குடிநீர் தட்டுப்பாட்டால் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள்.
நெல்லை,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால் 24 மாவட்டங்களில் 20 பஞ்சாயத்து யூனியன்கள் உள்பட பெரும்பாலான பகுதிகள் வறட்சி பாதிக்கப்பட்ட பகுதிகளாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு உள்ளது.
நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை, வாசுதேவநல்லூர், ராதாபுரம், ஆலங்குளம், சேரன்மாதேவி உள்ளிட்ட யூனியன்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மானாவாரி குளங்கள் அனைத்தும் தண்ணீர் இன்றி பாளம், பாளமாக வெடித்துக் கிடக்கின்றன. கால்நடைகள் தண்ணீருக்காக இந்த குளங்களை தேடி செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டு உள்ளது.
மேலும் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் வறட்சியால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. ஆங்காங்கே குடிநீருக்காக மக்கள் குடங்களை எடுத்துக்கொண்டு அங்குமிங்கும் செல்லும் காட்சிகளை காண முடிகிறது.
நெல்லை மேலப்பாளையத்தை அடுத்த மேலக்கருங்குளம் கிராமத்திலும் பொதுமக்கள் குடிநீர் தட்டுப்பாட்டால் அவதிப்பட்டு வருகிறார்கள். இங்குள்ள தந்தை பெரியார் நகர் சோதனைச்சாவடி அருகில் உள்ள பொது குடிநீர் குழாயில் நூற்றுக்கணக்கான காலிக்குடங்களை பொதுமக்கள் வரிசையாக வைத்திருந்தனர். எப்போது குடிநீர் வரும் என்று பொதுமக்கள் காத்திருந்து தண்ணீர் பிடித்து வருகின்றனர்.
இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், “தாமிரபரணி ஆற்றில் இருந்து சிறிது தூரத்தில் இருந்தபோதிலும் எங்களது பகுதியில் குடிநீர் பிரச்சினை மட்டும் தீரவே இல்லை. இங்கு தினந்தோறும் குடிநீர் வழங்கப்பட்டு வந்த நிலையில் கடந்த சில நாட்களாக 2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் கிடைத்தது. அதுவும் தற்போது தண்ணீர் வருமா? வராதா? என்ற நிலையில் பொதுமக்கள் குடிநீர் குழாயை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டி உள்ளது. கோடை வெயில் சுட்டெரிக்கும் சூழ்நிலையில் தாகம் தீர்க்க போதுமான தண்ணீர் கிடைக்க அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தனர்.