மதுரையில் ரூ.4 கோடி பறிமுதல் வங்கிக்கு கொண்டு வந்த போது சிக்கியது

மதுரையில் உரிய ஆவணங்கள் இன்றி வங்கிக்கு கொண்டு வந்த ரூ.4½ கோடியை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

Update: 2019-03-22 22:45 GMT
மதுரை,

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நடத்தை விதிகள் அமலில் உள்ளன. மதுரை மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடாவை தடுக்க 70-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தீவிர ரோந்து பணி நடந்து வருகின்றன.

உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்படும் பணம், தங்க நகைகள், பொருட்களை கைப்பற்றி பறிமுதல் செய்து வருகின்றனர். இதுவரை மதுரை மாவட்டத்தில் 120 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் வைக்கப்பட்டு உள்ளன. மேலும் பல கோடி ரொக்கப்பணமும் கைப்பற்றப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் நேற்று மதுரை யானைக்கல் பாலத்தில் பறக்கும் படையினர் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனை மறித்து நிறுத்தினர்.

அந்த வேனில் இருந்தவர்கள், “தங்கள் வாகனத்தில் வங்கிக்கு சொந்தமான பணம் இருக்கிறது” என்று கூறினர். உடனே அதிகாரிகள் அதற்குரிய ஆவணத்தை தருமாறு கேட்டனர். ஆனால் உரிய ஆவணம் இல்லை. எனவே அந்த வாகனத்தை பாதுகாப்புடன் கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.

அங்கு கலெக்டர் நடராஜன், அந்த வேனை பார்வையிட்டு அதில் உள்ள பணம் குறித்து மதிப்பீடு செய்ய உத்தரவிட்டார். அதன்படி அதில் இருந்த பணம் எண்ணப்பட்டது. மொத்தம் ரூ.4 கோடியே 50 லட்சம் இருந்தது.

இது குறித்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அந்த பணம் திருச்சி தில்லை நகரில் இருந்து மதுரை ஆரப்பாளையத்தில் உள்ள ஒரு வங்கிக்கு எடுத்து வரப்பட்டதும், ஆனால் ஆவணங்கள் சரியாக இல்லை எனவும் தெரிந்தது. இதைத்தொடர்ந்து அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

மதுரையில் கிலோ கணக்கில் தங்க நகைகள், தங்கக்கட்டிகளும், கோடிக் கணக்கில் பணமும் தொடர்ச்சியாக பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் மீண்டும் ரூ.4½ கோடி வங்கிப்பணம் பறிமுதலாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்