திருச்சி பறக்கும் படையினர் வாகன சோதனை: அரிசி ஆலை அதிபரிடம் ரூ.1 லட்சம் பறிமுதல்
திருச்சி பறக்கும்படை அதிகாரிகள் நடத்திய வாகனசோதனையில் அரிசி ஆலை அதிபரிடம் ரூ.1 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மலைக்கோட்டை,
திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருச்சி-புதுக்கோட்டை சாலையில் விமான நிலையம் அருகில், தனித்தாசில்தார் ரேணுகா தலைமையில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை மறித்து சோதனை நடத்தப்பட்டது.
காரில் வந்தவர் கீரனூர் பகுதியை சேர்ந்த சீனிவாசன், அரிசி ஆலை அதிபர் ஆவார். சோதனையில் ரூ.1 லட்சம் பணம் இருந்தது கண்டறியப்பட்டது. அதற்கான ஆவணங்களை பறக்கும் படையினர் கேட்டபோது, அரிசி ஆலைக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக ரூ.1 லட்சத்தை எடுத்து வந்ததாக சீனிவாசன் தெரிவித்தார். ஆனால், அதற்கு உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லை என்பதால் அதை ஏற்க மறுத்த தேர்தல் பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்து, திருச்சி கிழக்கு தாசில்தார் சண்முகவேலனிடம் ஒப்படைத்தனர். பின்னர் அந்த பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.