தொழிலாளியை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள்தண்டனை வேலூர் கோர்ட்டு தீர்ப்பு

கூலித்தொழிலாளியை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள்தண்டனை விதித்து வேலூர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2019-03-22 23:00 GMT
வேலூர்,

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே உள்ள திருநள்ளாறு பகுதியை சேர்ந்தவர் அப்துல்அஜிஸ் (வயது 43). கூலித்தொழிலாளி. இவர் 2-வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வேலூர் மக்கானில் வசித்து வந்தார். தஞ்சாவூர் மாவட்டம் திருமாங்குடியை சேர்ந்த சாதிக் என்ற சாகுல் அமீது (31) என்பவர் வேலூர் வந்தபோது, அப்துல்அஜிஸ் உடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் நண்பர்கள் ஆனார்கள்.

இந்த நிலையில் இருவரும் ஒருநாள் மோட்டார்சைக்கிளில் சென்றபோது விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் அப்துல்அஜிஸ் காயம் அடைந்தார். அவரது மோட்டார்சைக்கிளும் சேதமானது.

இந்த விபத்துக்கு சாகுல்அமீது தான் காரணம் எனக்கூறி அவரிடம் அப்துல்அஜிஸ் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்து வந்தார். இதனால் ஆத்திரமடைந்த சாகுல்அமீது, அப்துல்அஜிஸை கொலை செய்ய திட்டமிட்டார்.

அதன்படி 30.1.2016 அன்று சாகுல் அமீது, அப்துல் அஜிஸை மேல்மொணவூர் மோட்டூர் ஏரிக்கு அழைத்துச் சென்று அவரது கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்தார். மேலும், அப்துல்அஜிஸ் உடலை யாரும் அடையாளம் தெரிந்து கொள்ள கூடாது என்பதற்காக அவரது முகத்தை சேதப்படுத்தி உடலில் தீ வைத்து அங்கிருந்து சாகுல்அமீது தப்பிச்சென்றார்.

இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாகுல்அமீதுவை கைது செய்தனர்.

இந்தவழக்கு வேலூர் மாவட்ட கூடுதல் விரைவு நீதிமன்றத்தில் நடந்தது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் வக்கீல் அ.கோ.அண்ணாமலை ஆஜராகி வாதாடினார். அதைத்தொடர்ந்து நீதிபதி எஸ்.குணசேகர் தீர்ப்பு கூறினார்.

அதில் ‘அப்துல் அஜிஸை கொலை செய்ததற்காக சாகுல்அமீதுக்கு ஆயுள் தண்டனையும் ரூ.2 ஆயிரம் அபராதமும், தடயத்தை மறைத்ததற்காக 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்தார். இதையடுத்து போலீசார் சாகுல்அமீதுவை வேலூர் ஜெயிலுக்கு அழைத்துச் சென்றனர். சாகுல்அமீது மீது மோட்டார்சைக்கிள் திருட்டு வழக்கு உள்பட பல குற்ற வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்