சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க. வேட்பாளர் உள்பட 4 பேர் வேட்பு மனுதாக்கல்

சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க. வேட்பாளர் சந்திரசேகர் உள்பட 4 பேர் நேற்று தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனுதாக்கல் செய்தனர்.

Update: 2019-03-22 22:15 GMT
அரியலூர்,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந்தேதி நடக்கிறது. அந்த தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 19-ந்தேதி தொடங்கியது. வருகிற 26-ந்தேதி வரை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

அதன்படி சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரியும், கலெக்டருமான விஜயலட்சுமியிடம் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் வரை யாரும் வேட்பு மனுதாக்கல் செய்யவில்லை.

இந்த நிலையில் நேற்று மதியம் சிதம்பரம் (தனி) தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் அரியலூர் அருகே உள்ள பொய்யாதநல்லூர் அண்ணா நகரை சேர்ந்த பி.சந்திரசேகர் தனது கட்சியினர், கூட்டணி கட்சியினருடன் சேர்ந்து அரியலூர் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான விஜயலட்சுமியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பாளர் சந்திரசேகருடன், அரியலூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், அரசு தலைமை கொறடாவுமான தாமரை ராஜேந்திரன், பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணை தலைவர் வைத்தி, பாரதீய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவர் சரவணன், தே.மு.தி.க. மாநில துணை செயலாளர் உமாநாத் ஆகிய 4 பேர் உடனிருந்தனர்.

இதே போல் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பூங்குடி மெயின்ரோடு புவனகிரியை சேர்ந்த எம்.சிவஜோதி நாம் தமிழர் கட்சி சார்பிலும், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த மு.ஜெகதீசன் சுயேச்சையாகவும், கடலூர் மாவட்டம் திட்டகுடி அருகே உள்ள வடகரை வடக்கு தெருவை சேர்ந்த சு.பார்வதி தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பிலும் தேர்தல் நடத்தும் அதிகாரி விஜயலட்சுமியிடம் வேட்பு மனுதாக்கல் செய்தனர்.

சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதிக்கு நேற்று ஒரே நாளில் அ.தி.மு.க. வேட்பாளர் உள்பட 4 பேர் மனு தாக்கல் செய்ய வந்ததால் கலெக்டர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது. நாளை மறுநாள் (திங்கட்கிழமை) தி.மு.க. கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் திருமாவளவனும், 26-ந்தேதி டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் இளவரசனும் வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளனர்.

மேலும் செய்திகள்