திருச்சியில் இருந்து உரிய ஆவணங்கள் இன்றி வங்கிக்கு எடுத்து வந்த ரூ.60 லட்சம் பறிமுதல்

திருச்சியில் இருந்து உரிய ஆவணங்கள் இன்றி தேனியில் உள்ள தனியார் வங்கி கிளைக்கு எடுத்து வந்த ரூ.60 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.;

Update: 2019-03-22 23:00 GMT
தேனி,

தேனி-பெரியகுளம் சாலையில் மதுராபுரி அருகில் பறக்கும் படை அதிகாரியான ரமேஷ்கண்ணன் தலைமையில் பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வங்கிக்கு பணம் ஏற்றிச் செல்லும் ஒரு வாகனம் வந்தது. அந்த வாகனத்தில் 3 பேர் வந்தனர். அவர்களில் 2 பேர் துப்பாக்கிகள் வைத்து இருந்தனர்.

மேலும் அந்த வாகனத்தில் ரூ.60 லட்சம் இருந்தது. விசாரணையில் அவர்கள் திருச்சியில் இருந்து தேனி பங்களாமேட்டில் உள்ள ஒரு தனியார் வங்கி கிளைக்கு பணத்தை எடுத்து வந்ததாகவும், துப்பாக்கியுடன் வந்தவர்கள் அதற்கான பாதுகாவலர்கள் என்றும் தெரிவித்தனர்.

இருப்பினும், அவர்களிடம் பணத்தை எடுத்து வருவதற்கு உரிய ஆவணங்கள் இல்லை. இதனால், விசாரணைக்காக பணத்தையும், பணம் கொண்டு வந்த வாகனத்தையும் பறிமுதல் செய்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு பறக்கும் படையினர் கொண்டு வந்தனர். அங்கு மேல்முறையீட்டு பிரிவில் பணம் வைக்கப்பட்டது. அந்த பணத்தை தேர்தல் நடத்தும் அதிகாரியும், கலெக்டருமான பல்லவி பல்தேவ் பார்வையிட்டார். இதையடுத்து சம்பந்தப்பட்ட வங்கி கிளை அதிகாரிகள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் தங்களிடம் பணம் எடுத்து வருவதற்கான ஆவணங்கள் இருப்பதாக கூறினர். வங்கி அதிகாரிகள் தங்களிடம் இருந்த ஆவணங்களை சமர்ப்பித்தனர். அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது.

மேலும் செய்திகள்