காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர்கள் மனுதாக்கல்

காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்தனர்.

Update: 2019-03-22 23:15 GMT
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஜி.செல்வம் நேற்று காலை காஞ்சீபுரம் நகராட்சி முன்பு உள்ள அண்ணா, பெரியார், காந்தி சிலைகளுக்கு மாலைகள் அணிவித்து வணங்கினார். பின்னர் அவர் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு, காமராஜர் தெரு, வள்ளல் பச்சையப்பன் தெரு, மேட்டுத்தெரு காவலான் கேட் வழியாக காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தை சென்றடைந்தார்.

கலெக்டர் அலுவலகத்தில், தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான பொன்னையாவிடம் அவர் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான க.சுந்தர், வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தா.மோ.அன்பரசன், காஞ்சீபுரம் எம்.எல்.ஏ. எழிலரசன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் இ.வளையாபதி, காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜி.வி.மதியழகன் மற்றும் கூட்டணி கட்சியினர் உடன் இருந்தனர்.

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளரும், முன்னாள் மத்திய மந்திரியுமான டி.ஆர்.பாலு, காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் துறை அதிகாரி என்.சுந்தரமூர்த்தியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

அவருடன் முன்னாள் அமைச்சரும், வடக்கு மாவட்ட செயலாளருமான தா.மோ.அன்பரசன், தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், உத்திரமேரூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான க.சுந்தர், முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ஆர். ராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்