கலெக்டர் தொடங்கி வைத்தார்: பவுர்ணமி கிரிவலம் சென்ற பக்தர்களுக்கு 100 சதவீத வாக்குப்பதிவுக்கு விழிப்புணர்வு மாற்றுத்திறனாளிகள் மொபட் ஊர்வலம்

பவுர்ணமி கிரிவலம் சென்ற பக்தர்களுக்கு 100 சதவீத வாக்குப்பதிவுக்கான விழிப்புணர்வை கலெக்டர் கந்தசாமி தொடங்கி வைத்தார். மேலும் மாற்றுத்திறனாளிகளின் மொபட் ஊர்வலம் நடந்தது.

Update: 2019-03-21 23:24 GMT
திருவண்ணாமலை,

தமிழகத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 100 சதவீத வாக்குப்பதிவு அடைய திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கு பல்வேறு வழிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் சென்ற பக்தர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, அருணாசலேஸ்வரர் கோவில் வளாகத்தில் பக்தர்களிடம் ‘100 சதவீதம் வாக்களிப்போம்‘ முத்திரையுடன் தரிசனம் டோக்கன் மற்றும் பிரசாத துணிப்பைகளையும் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டரும் கந்தசாமி வழங்கினார்.

இதனையடுத்து திருவண்ணாமலை ஈசான்ய மைதானம் எதிரில் தேர்தல் விழிப்புணர்வு தெருக்கூத்து நாடகத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார். மேலும் கிரிவலம் வரும் பக்தர்களுக்கு 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். பின்னர் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு வீடியோ பிரசார வாகனம் மூலம் கிரிவலம் வரும் பக்தர்கள் மற்றும் வாக்காளர்களிடம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு குறும்படங்கள் திரையிட்டு காட்டப்படுவதை நேரில் பார்வையிட்டார்.

இந்த நிலையில் அண்ணா நுழைவு வாயில் அருகே மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் நேற்று தேர்தல் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது. ஊர்வலத்தில் மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்துகொண்டு, அவர்களுக்கான 3 சக்கர சைக்கிள்கள் மற்றும் மொபட்டிகளில் ஊர்வலமாக சென்றனர்.

கலெக்டர் கந்ததசாமி ஊர்வலத்தை தொடங்கி வைத்து, 3 சக்கர சைக்கிளை ஓட்டியவாறு ஊர்வலமாக சென்றார். ஊர்வலம் அறிவொளி பூங்கா வரை சென்றது. இதையடுத்து அங்கு மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் எந்திரம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பின்னர் கலெக்டர் கந்தசாமி நிருபர்களிடம் கூறுகையில், ‘திருவண்ணாமலை மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவு அடைய பல்வேறு வழிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். தேர்தல் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாக்குச்சாவடி மையங்களில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன. மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்கவும் அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. மாற்றுத்திறானிகள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் தனியே அடையாளம் காணும் வகையில் குறிக்கப்பட்டு உள்ளது. அதிகாரிகள் அதைகண்டு வாக்கு செலுத்த வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களுக்கான அனைத்து வசதிகளும் செய்து கொடுப்பார்கள்’ என்றார்.

நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் (பயிற்சி) பிரதாப், திருவண்ணாமலை சப்-கலெக்டர் ஸ்ரீதேவி, கோவில் இணை ஆணையர் ரா.ஞானசேகர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்