ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்கு 3 நாட்களாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை - 30 விண்ணப்பங்கள் வினியோகம்

ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்கு 3 நாட்களாக யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. ஆனால் 30 பேர் வேட்பு மனுக்கான விண்ணப்பங்களை வாங்கி சென்றுள்ளனர்.

Update: 2019-03-21 23:21 GMT
ஈரோடு,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 19-ந் தேதி தொடங்கியது. ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்காக ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகம், ஈரோடு ஆர்.டி.ஓ. அலுவலகம் ஆகிய இடங்களில் வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. அங்கு வேட்பாளர்கள் மற்றும் உடன் வருபவர்களின் வாகனங்களை நிறுத்துவதற்காக 100 மீட்டர் தொலைவில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது. மேலும், வேட்பாளர் மற்றும் உடன் 4 பேர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

இதனால் மாவட்ட கலெக்டர் அலுவலகம், ஆர்.டி.ஓ. அலுவலகத்தின் நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ள போலீசார், அலுவலகத்துக்குள் சென்ற அனைவரையும் விசாரணை நடத்தி உள்ளே அனுப்பினார்கள். மேலும், அரசு அதிகாரிகள், போலீசாரின் வாகனங்கள் தவிர மற்ற கார்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

வேட்பு மனு தாக்கல் தொடங்கிய முதல் 2 நாட்களில் யாரும் வேட்பு மனுக்களை வாங்க வரவில்லை. ஆனால் 23 பேர் விண்ணப்பிப்பதற்கு தேவையான வேட்பு மனுக்களை வாங்கி சென்றனர். அதேபோல் 3-வது நாளாக நேற்று பகல் 11 மணிக்கு வேட்பு மனுக்களை பெறுவதற்காக மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான சி.கதிரவன் தனது அலுவலகத்தில் காத்திருந்தார். ஆனால் நேற்றும் வேட்பு மனு தாக்கல் செய்ய யாரும் வரவில்லை.

இதேபோல் ஈரோடு ஆர்.டி.ஓ. அலுவலகத்திலும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படவில்லை. இதனால் கடந்த 3 நாட்களாக ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்கு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. நேற்று 7 பேர் வேட்பு மனு தாக்கல் செய்ய விண்ணப்பங்களை வாங்கி சென்றனர். இதுவரை 30 வேட்பு மனுக்கள் வினியோகிக்கப்பட்டு உள்ளன.

வேட்பு மனு தாக்கல் நடைபெறுவதால் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு செல்லும் அனைவரையும் நுழைவு வாயிலிலேயே போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அதில் குறிப்பிட்ட சிலரை மட்டும் உள்ளே செல்ல போலீசார் அனுமதித்ததால் கலெக்டர் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட் டது.

இன்றும் (வெள்ளிக்கிழமை), வருகிற 25-ந் தேதி, 26-ந் தேதியும் என மொத்தம் 3 நாட்கள் மட்டுமே வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய முடியும். எனவே இன்று (வெள்ளிக்கிழமை) ஒரு சில முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களும், சுயேச்சைகளும் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்