கையகப்படுத்திய நிலத்திற்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்காமல் இழுத்தடிப்பு - நீதிபதி எச்சரிக்கையால் உடனே செலுத்தப்பட்டது
கிழக்கு கடற்சாலை திட்டத்திற்கு கையகப்படுத்திய கூடுதல் நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்காமல் இழுத்தடித்த அதிகாரிகளை நீதிபதி இறுதி எச்சரிக்கை விடுத்ததால் உடனடியாக முழு தொகையையும் கோர்ட்டில் செலுத்தினர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் ஓம்சக்தி நகரை சேர்ந்தவர் விஜயன். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு சொந்தமாக மாடக்கொட்டான் பகுதியில் இருந்த நிலத்தை கிழக்கு கடற்கரை சாலை அமைப்பதற்காக அரசு கையகப்படுத்தியது. இதற்காக 303 சதுர அடிக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்பட்ட நிலையில் நிலத்தினை அளந்து பார்த்தபோது மொத்தம் 1,483 சதுர அடி அளவுக்கு கையகப்படுத்தி சாலை போடப்பட்டிருந்ததையும், 1,180 சதுர அடி கூடுதலாக எடுக்கப்பட்டதால் அந்த நிலத்தை திரும்ப வழங்கக்கோரி ராமநாதபுரம் மாவட்ட உரிமையியல் கோர்ட்டில் கடந்த 2012-ம் ஆண்டு விஜயன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை மாவட்ட உரிமையியல் கோர்ட்டு நீதிபதி விசாரித்து தார்ச்சாலையை அப்புறப்படுத்திவிட்டு விஜயனிடம் நிலத்தை ஒப்படைக்க உத்தரவிட்டார். அதன் பின்பும் நிலம் ஒப்படைக்கப்படாததால் கடந்த 2015-ம் ஆண்டு அதே கோர்ட்டில் விஜயன் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணையின்போது நிலத்தை உடனடியாக ஜப்தி செய்து ஒப்படைக்குமாறு கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 4-ந்தேதி நிலத்தை ஜப்தி செய்வதற்காக கோர்ட்டு அதிகாரிகள் சென்றபோது வருவாய்த்துறை அதிகாரிகள் 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந்தேதியிட்ட அரசாணை நகலை காட்டி கூடுதலாக கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு ரூ.3 லட்சத்து 81 ஆயிரத்து 629 இழப்பீடு வழங்க அரசு உத்தரவிட்டிருப்பதாக தெரிவித்தனர்.
இந்த உத்தரவை நிறைவேற்ற 10 நாட்கள் அவகாசம் அளிக்குமாறு கேட்டுக்கொண்டனர். அதைத்தொடர்ந்து ஜப்தி நடவடிக்கை கைவிடப்பட்டது. அதன் பிறகும் தற்போது வரை இழப்பீட்டு தொகை வழங்கப்படாததால் விஜயன் மீண்டும் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்தார். தொடர்ந்து கோர்ட்டு உத்தரவினை மீறி செயல்படுவதாக எச்சரித்த நீதிபதி ராஜேஷ்குமார், உடனடியாக தார்ச்சாலையை எந்திரம் மூலம் அப்புறப்படுத்திவிட்டு நிலத்தை விஜயனிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.
இதன்படி மனுதாரர் விஜயன், அவரது வக்கீல் சுந்தர்ராஜன் ஆகியோருடன் கோர்ட்டு அலுவலர்கள் கடந்த பிப்ரவரி மாதம் 19-ந் தேதி நிலத்தை ஜப்தி செய்ய சென்றனர். அங்கு வந்த அதிகாரிகள் விஜயனுக்காக தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டதாகவும், தொகை ஒப்படைக்க கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இதுவே, கடைசி அவகாசம் என்றும், இனி சாலையை பிரித்து கையகப்படுத்தி உரியவரிடம் ஒப்படைக்கப்படும் என்றும் இறுதியாக நீதிபதி எச்சரித்து அவகாசம் வழங்கினார்.
இந்நிலையில் நீதிபதி ராஜேஷ்குமாரின் எச்சரிக்கையை தொடர்ந்து அதிகாரிகள் நில உரிமையாளர் விஜயனுக்கான இழப்பீடு தொகை ரூ.3 லட்சத்து 81 ஆயிரத்து 629-ஐ மாவட்ட உரிமையியல் கோர்ட்டில் செலுத்தினர். இந்த தொகையை பெற்றுக்கொண்ட கோர்ட்டு அதனை காசோலையாக வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த வழக்கில் அரசு தரப்பில் நீதிபதி முகைதீன் இப்ராம்சா ஆஜரானார்.
நில உரிமை தொடர்பான வழக்குகள் தலைமுறை தலைமுறையாக நடைபெற்று வரும் என்ற நிலையை மாற்றி நில உரிமையாளருக்கு தெரியாமல் நிலத்தை ஆக்கிரமித்ததோடு, அதற்கான நிவாரண தொகையை வழங்காமல் இழுத்தடித்த அதிகாரிகளை நீதிபதி எச்சரித்து தொடர் விசாரணை நடத்தி உடனடியாக இழப்பீட்டினை பெற்றுத்தந்தது குறிப்பிடத்தக்கது.