திருப்பூரில், கடை உரிமையாளர் வீட்டில் நகை திருடிய ஊழியர் கைது
திருப்பூரில் கடை உரிமையாளர் வீட்டில் நகை திருடிய ஊழியர் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திருப்பூர்,
திருப்பூர் கே.பி.என்.காலனியை சேர்ந்தவர் சந்தானம்(வயது 39). இவர் தனது வீட்டின் மாடியில் வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். இவருடைய கடையில் திருப்பூர் சாமுண்டிபுரத்தை சேர்ந்த முகமது உசைன்(38) என்பவர், வெளியே சென்று பணம் வசூலிக்கும் வேலை செய்து வந்துள்ளார். கடந்த 7-ந் தேதி சந்தானத்தின் மனைவி வீட்டின் முன்புறம் துணி துவைக்கும்போது தனது 3 பவுன் தங்க வளையல்களை கழற்றி வைத்து துவைத்துள்ளார்.
அந்த நேரம் முகமது உசைன் அங்கு வந்து விட்டு சென்றுவிட்டார். அதன்பிறகு நகையை காணவில்லை. இதுகுறித்து சந்தானம் முகமது உசைனிடம் கேட்டபோது அவர், தான் நகையை எடுக்கவில்லை என்று மறுத்தார். பின்னர் மறுநாள் முதல் அவர் வேலைக்கு வரவில்லை. இதுகுறித்து சந்தானம் திருப்பூர் வடக்கு குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் முகமது உசைன் திருப்பூர் புதுமார்க்கெட் வீதியில் நின்றபோது போலீசார் அவரை பிடித்தனர். விசாரணையில் அவர் நகை திருடியதை ஒப்புக்கொண்டார். மேலும் திருடிய நகையை விற்பனை செய்ய வந்ததும் தெரியவந்தது. அவரிடம் இருந்து 3 பவுன் வளையல்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது உசைனை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.