நாடாளுமன்ற தேர்தலில் மராட்டியத்தில் போட்டியிடும் 16 பா.ஜனதா வேட்பாளர்கள் அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தலில் மராட்டியத்தில் போட்டியிடும் 16 பா.ஜனதா வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். இதில் மத்திய மந்திரி நிதின் கட்காரி, மாநில பா.ஜனதா தலைவர் ராவ்சாகேப் தன்வே வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

Update: 2019-03-22 00:30 GMT
வடமத்திய மும்பையில் பூனம் மகாஜனும், வடக்கு மும்பையில் கோபால் ஷெட்டியும் போட்டியிடுகின்றனர்.

மும்பை, 

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறுகிறது.

மராட்டியத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 11, 18, 23 மற்றும் 29 ஆகிய நாட்களில் 4 கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதில் முதல்கட்ட மற்றும் 2-ம் கட்ட தேர்தலுக்கான 17 தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் தொடங்கி நடந்து வருகிறது. ஆனால் பா.ஜனதா வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது.

இந்தநிலையில் நாடு முழுவதும் 184 தொகுதிகளுக்கான முதல்கட்ட பா.ஜனதா வேட்பாளர் பட்டியலை மத்திய சுகாதாரத்துறை மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவருமான ஜே.பி.நட்டா வெளியிட்டார்.

இந்த பட்டியலில் மராட்டியத்தை சேர்ந்த 16 தொகுதி வேட்பாளர்களின் பெயரும் இடம் பிடித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

1. நாக்பூர்- நிதின் கட்காரி

2. ஜல்னா- ராவ்சாகேப் தன்வே

3. வடமும்பை- கோபால் ஷெட்டி

4. வட மத்திய மும்பை - பூனம் மகாஜன்

5. பிவண்டி- கபில் பாட்டீல்

6. பீட்- பிரீத்தம் முண்டே

7. நந்துர்பர்- ஹீனா காவித்

8. ராவேர்- ரக்‌ஷா கட்சே

9. துலே- சுபாஷ் பாம்ரே

10. சந்திராப்பூர்- ஹன்ஸ்ராஜ் அகிர்

11. வார்தா- ராம்தாஸ் தடஸ்

12. அகோலா- சஞ்சய் தோத்ரே

13. அகமத்நகர்- சுஜய் விகே பாட்டீல்

14. கட்சிரோலி-சிமுர்- அசோக் நேத்தே

15. லாத்தூர்- சுதாகர் சிருங்கரே

16. சாங்கிலி- சஞ்சய் காகா பாட்டீல்

2 பேருக்கு மீண்டும் வாய்ப்பு மறுப்பு

வேட்பாளர்களில் 14 பேர் கடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி. ஆனவர்கள். இவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நிதின் கட்காரி, சுபாஷ் பாம்ரே, ஹன்ஸ்ராஜ் அகிர் ஆகியோர் மத்திய மந்திரி ஆவர். ராவ் சாகேப் தன்வே மாநில பா.ஜனதா தலைவர் ஆவார்.

வேட்பாளர் பட்டியலில் 2 எம்.பி.க்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு இருக்கிறது. இதில், காங்கிரசில் ‘சீட்’ கிடைக்காததால் அக்கட்சியில் இருந்து விலகிய சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ராதாகிருஷ்ண விகே பாட்டீலின் மகன் சுஜய் விகே பாட்டீலுக்கு அகமது நகர் தொகுதியை பா.ஜனதா ஒதுக்கியுள்ளது. இதனால் அந்த தொகுதியில் எம்.பி.யாக இருக்கும் திலிப் காந்திக்கு இந்த முறை வாய்ப்பு கிடைக்கவில்லை.

திலிப் காந்தி 2009 மற்றும் 2014-ம் ஆண்டு தேர்தல்களில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு 2 முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிட்டத்தக்கது

லாத்தூர் எம்.பி. சுனில் கெய்க்வாட்டிற்கும் இந்த முறை ‘சீட்’ கிடைக்கவில்லை. 

இதனால் வாய்ப்பு மறுக்கப்பட்ட எம்.பி.க்கள் 2 பேரும் அதிருப்தியில் உள்ளதாக தெரிகிறது.

மராட்டியத்தில் மொத்தம் உள்ள 48 நாடாளுமன்ற தொகுதிகளில் பா.ஜனதா 25 தொகுதிகளிலும், சிவசேனா 23 தொகுதிகளிலும் கூட்டணி வைத்து போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்