தென்மத்திய மும்பை தொகுதியில் மீண்டும் ஏக்நாத் கெய்க்வாட் போட்டி

மராட்டியத்தில் மேலும் 7 தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இதில், தென்மத்திய மும்பை தொகுதியில் ஏக்நாத் கெய்க்வாட் மீண்டும் போட்டியிடுகிறார்.

Update: 2019-03-22 00:15 GMT
மும்பை, 

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டு வருகிறது. மராட்டியத்தில் ஏற்கனவே 5 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து இருந்தது.

இந்தநிலையில், காங்கிரஸ் கட்சி தனது 6-வது பட்டியலை வெளியிட்டது. இந்த பட்டியலில் மராட்டியத்தில் போட்டியிடுவதற்காக மேலும் 7 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதன்படி மும்பையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவியை உள்ளடக்கிய தென்மத்திய மும்பை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக முன்னாள் எம்.பி. ஏக்நாத் கெய்க்வாட் மீண்டும் அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.

வேட்பாளரான ஏக்நாத் கெய்க்வாட் 2009-ம் ஆண்டு தென்மத்திய மும்பை தொகுதியில் வெற்றி பெற்றார். கடந்த தேர்தலில் தோல்வியை தழுவினார். இவர் முன்னாள் மந்திரியும், தாராவி தொகுதி எம்.எல்.ஏ.வுமான வர்ஷா கெய்க்வாட்டின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

நந்தூர்பரில் கே.சி. பட்வி எம்.எல்.ஏ., துலேயில் குணால் பாட்டீல் எம்.எல்.ஏ. ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். யவத்மால் தொகுதி வேட்பாளராக முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர் மாணிக்ராவ் தாக்கரே நிறுத்தப்பட்டு உள்ளார்.

வார்தாவில் சாருலதா டோகாஸ், ஷீரடியில் பாவுசாகேப் காம்பிளே, ரத்னகிரி-சிந்துதுர்க் தொகுதியில் நவின்சந்திர பண்டிவடேகர் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இதுவரை மராட்டியத்தில் போட்டியிடுவதற்காக 12 வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி அறிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்