வேடசந்தூர் அருகே, குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

வேடசந்தூர் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.;

Update: 2019-03-21 22:45 GMT
வேடசந்தூர், 

வேடசந்தூர் அருகே உள்ள நல்லமநாயக்கன்பட்டியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு ஏற்கனவே அமைக்கப்பட்ட 4 ஆழ்துளை கிணறுகள் மூலம் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது அவற்றில் தண்ணீர் இல்லாததால் காவிரி கூட்டுகுடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் 3 அல்லது 4 நாட்களுக்கு ஒருமுறையே அப்பகுதி மக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.

இதனால் போதிய அளவு குடிநீர் கிடைக்காமல் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய நிர்வாக அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்து எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலிக்குடங்களுடன் வேடசந்தூர்-எரியோடு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த வேடசந்தூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் விஜயலட்சுமி, எரியோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முரளி, ஊராட்சி மன்ற செயலர் முருகேஸ்வரி மற்றும் அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் நல்லமநாயக்கன்பட்டியில் குடிநீர் முறையாக வழங்கப்படுவதில்லை. தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் எங்கள் பகுதி மக்களுக்கு வேலை வழங்கவில்லை. இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என்றனர்.

அதையடுத்து பேசிய அதிகாரிகள் நல்லமநாயக்கன்பட்டிக்கு சீரான முறையில் குடிநீர் வழங்கப்படும். தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பொதுமக்கள் போராட்டம் காரணமாக அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்