மூளைச்சாவு அடைந்த என்ஜினீயர் உடல் உறுப்புகள் தானம்
விபத்தில் காயமடைந்து, மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட என்ஜினீயர் மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது.
மதுரை,
நெல்லை மாவட்டம் தென்காசியை சேர்ந்தவர் சாமிநாதன். இவருடைய மகன் சுரேஷ் (வயது 22). என்ஜினீயரிங் பட்டதாரி. கடந்த 19-ந்தேதி ராமேசுவரம் கோவிலுக்கு சென்று விட்டு சுரேஷ் உள்பட 7 பேர், காரில் நெல்லைக்கு வந்து கொண்டிருந்தனர். உச்சிப்புளி அருகே உள்ள பிரப்பன்வலசை பகுதியில் அவர்கள் வந்தபோது, அந்த வழியாக சென்ற லாரி ஒன்று கார் மீது மோதியது.
இதில் சுரேஷ் உள்பட 7 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சையில் இருந்த சுரேஷ் நேற்று அதிகாலை மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஒருங்கிணைப்பாளர் வெங்கடேஷ் மூலம் அவரது பெற்றோரிடம் உடல் உறுப்பு தானம் குறித்தும், சுரேசின் உறுப்புகளை தானமாக வழங்குவதன் மூலம் சிலருக்கு வாழ்வளிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து சுரேஷின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க பெற்றோர் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து பெரிய ஆஸ்பத்திரி டீன் வனிதா ஆலோசனையின்பேரில் டாக்டர்கள் குழுவினர் அறுவை சிகிச்சை மூலம் சுரேஷின் உடலில் இருந்து உடல் உறுப்புகளை அகற்றினர்.
இதில் கல்லீரல் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கும், கண்கள் மற்றும் ஒரு சிறுநீரகம் மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கும், மற்றொரு சிறுநீரகம் நெல்லை மருத்துவக்கல்லூரிக்கும், இருதய வால்வு சென்னை எம்.எம்.எம். மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.