தி.மு.க. கூட்டணியை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரசாரம் - முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி
அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜகண்ணப்பன் சமீபத்தில் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார். இதைதொடர்ந்து சிவகங்கையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-;
சிவகங்கை,
ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் கட்சி போவதை எதிர்த்து தர்மயுத்தம் நடத்தியதாக கூறிய ஓ.பன்னீர்செல்வம் தற்போது தன் மகனுக்கு சீட் வாங்கியுள்ளார். 11 பேர் கொண்ட குழு அமைத்து கூட்டுத்தலைமையில் தான் கட்சியை நடத்த வேண்டும் என பேசினோம். ஆனால் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட சிலர் முடிவுகளை எடுக்கின்றனர். அ.தி.மு.க.வில் ஜனநாயகம் இல்லை. கட்சியில் நிர்வாகிகள் தான் இருக்கின்றனர். தொண்டர்கள் இல்லை. திண்டுக்கல் தொகுதி முதன் முதலில் எம்.ஜி.ஆர். வென்ற தொகுதி. அந்த தொகுதியை எப்படி வேறு கட்சிக்கு கொடுக்கலாம். அ.தி.மு.க.வை மோடி தான் இயக்குகிறார் என்பது இதன் மூலம் தெளிவாகிறது. ஜெயலலிதா இருந்தால் இது போல் ஒரு முடிவை எடுத்திருப்பாரா. சட்டமன்ற இடைதேர்தல் முடிவிற்கு பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்படும்.
தென் மாவட்டத்தில் அ.தி.மு.க.விற்கு எந்த தொகுதியும் இல்லாமல் கூட்டணி கட்சிக்கு அவர்களாகவே ஒதுக்கீடு செய்துள்ளனர். எந்த பிரதிநிதித்துவ அடிப்படையும் இல்லாமல் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரி உள்பட அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணியே வெல்லும். தி.மு.க. கூட்டணியை ஆதரித்து வருகிற 25-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் பிரசாரம் தொடங்குகிறேன். ஏப்ரல் 10-ந் தேதி முதல் ஒரு வாரம் சிவகங்கை, ராமநாதபுரம் தொகுதிகளில் பிரசாரம் செய்ய உள்ளேன். என்னுடைய முடிவை அ.தி.மு.க. தொண்டர்கள் பெரும்பாலானோர் ஆதரிக்கின்றனர். இவ்வாறு அவர் ‘கூறினார்.
அப்போது அகில இந்திய காங்கிரஸ்கமிட்டி உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம், மாவட்டதி.மு.க. செயலாளர் பெரியகருப்பன், முன்னாள் அமைச்சர் தென்னவன், மானாமதுரை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் இலக்கியதாசன், காங்கிரஸ் மாவட்டதலைவர் சத்தியமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.