சாஸ்தா கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா திரளான பக்தர்கள் தரிசனம்

நெல்லை மாவட்டத்தில் சாஸ்தா கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா நேற்று நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் குடும்பத்தினருடன் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2019-03-21 22:30 GMT
நெல்லை,

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, நெல்லை மாவட்டத்தில் உள்ள சாஸ்தா கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. சேரன்மாதேவி அருகே உள்ள பிராஞ்சேரி கரையடி மாடசாமி கோவில் மற்றும் வீரியப்பெருமாள் சாஸ்தா கோவிலில் பங்குனி உத்திர சிறப்பு வழிபாடு அதிகாலை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

காலை 10.30 மணிக்கு பால்குட ஊர்வலம், மதியம் 12 மணிக்கு கும்பாபிஷேகம், சாஸ்தா மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மதியம் 1 மணிக்கு அன்னதானம் நடந்தது. இரவு 12 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை, பரிவார தேவதைகளுக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. இதைத்தொடர்ந்து ஆடு, கோழிகள் பலியிடப்பட்டன.

அம்பை அருகே உள்ள மெய்யப்ப சாஸ்தா கோவில், கோபாலசமுத்திரம் பசுங்கிளி சாஸ்தா கோவில், படப்பகுறிச்சி குளத்துப்புழை தர்ம சாஸ்தா கோவில், மானூர் கீழப்பிள்ளையார்குளம் திருமேனி அய்யனார் சாஸ்தா கோவில், உக்கிரன்கோட்டை அணைத்தலை அய்யனார் தர்ம சாஸ்தா கோவில், மணக்கரை புங்கமுடையார் சாஸ்தா கோவில், தென்திருப்பேரை கடம்பாகுளம் கரையில் உள்ள பூலுடையார் சாஸ்தா கோவில், நிறைகுளத்து சாஸ்தா, சீவலப்பேரி மறுகால்தலை பூலுடையார் சாஸ்தா, பாவூர்சத்திரம் அருகே உள்ள கைகொண்டார் சாஸ்தா கோவில், கடையம் அருகே உள்ள சூட்சமுடையார் சாஸ்தா கோவில், ராமநதி தலைமலை அய்யனார், நரசிங்கநல்லூர் முருகுவுடையார் சாஸ்தா கோவில், பாளையங்கோட்டை சாஸ்தா, செய்துங்கநல்லூர் சுந்தரபாண்டிய சாஸ்தா, டவுன் தடிவீரன் சாஸ்தா, மேகலிங்கசாஸ்தா கோவில், பூவாணி நிறைகுளத்து அய்யனார் கோவில், நெல்லை டவுன் முருங்கையடி சாஸ்தா கோவில் உள்ளிட்ட சாஸ்தா கோவில்களில் நேற்று காலை முதல் பங்குனி உத்திர சிறப்பு வழிபாடு மற்றும் பொங்கலிடுதல், படையல் பூஜை போடுதல், சிறப்பு அலங்கார தீபாராதனை ஆகியவை நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நெல்லை சந்திப்பில் உள்ள சாலைக்குமாரசாமி கோவிலி லும் பங்குனி உத்தி ரத்தையொட்டி திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து கோவில்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. நேற்று அதிகாலையில் இருந்து இரவு வரை நெல்லை புதிய பஸ் நிலையம், சந்திப்பு ரெயில் நிலையத்தில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

குடும்ப சாஸ்தா கோவில் தெரியாதவர்களுக்கு சொரிமுத்து அய்யனார் தான் பொதுவான சாஸ்தா என்பதால் நேற்று பாபநாசம் காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.

நேற்று காலையில் மகாலிங்கசாமி, சொரிமுத்து அய்யனார், சங்கிலி பூதத்தாருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இதைத்தொடர்ந்து மதியம் பட்டவராயன், தளவாய்மாடசாமி, தூசி மாடசாமி, கசமாடசாமி, பேச்சி, பிரம்மசக்தி, சுடலை மாடசாமி, மொட்டை கருப்பசாமி, கும்பமுனி, சட்டநாதர், பாதாகண்டி அம்மன் உள்ளிட்ட சாமிகளுக்கும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. மாலையில் கிடா வெட்டி படையல் பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பொங்கல் வைத்தும் வழிபட்டனர். பங்குனி உத்திரத்தையொட்டி காரையாருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் நெல்லை மாவட்டத்துக்கு நேற்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்