மகளிர் சுயஉதவி குழுவினர் பங்கேற்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி: 100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் - கலெக்டர் ராமன் பேச்சு

தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க மகளிர் சுயஉதவி குழுவினர் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் கலெக்டர் ராமன் பேசினார்.

Update: 2019-03-20 23:35 GMT
வேலூர்,

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந் தேதி நடைபெற உள்ளது. அதையொட்டி வேலூர் மாவட்ட மகளிர் திட்டத்துறையின் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வேலூர் கோட்டை பூங்காவில் நேற்று மாலை நடந்தது.

மகளிர் திட்ட இயக்குனர் சிவராமன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ராமன் தலைமை தாங்கி தேர்தலில் நேர்மையாக வாக்காளர்கள் வாக்களிக்கவும், 100 சதவீதம் வாக்களிக்கவும் உறுதிமொழி யினை வாசிக்க மகளிர் சுய உதவிக்குழுவினர் ஏற்றுக்கொண்டனர்.

அதைத்தொடர்ந்து கலெக்டர் ராமன் பேசியதாவது:-

நமது ஜனநாயகத்தின் முக்கிய நிகழ்வான தேர்தலில் வாக்களிப்பது அனைவரின் கடமையும், உரிமையும் ஆகும். இதனை நிறைவேற்றிட அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும். வேலூர் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குகளை பதிவு செய்ய பொதுமக்களிடையே மகளிர் சுய உதவிக்குழுவினர் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மகளிர் சுய உதவிக்குழுவில் உள்ள பெண்களிடம் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தினால் அனைவரிடமும் சென்று சேரும் என்ற நோக்கத்தில் தெரிவிக்கப்படுகிறது.

எனவே அனைவரும் நியாயமான முறையில் தங்களது தேர்தல் ஜனநாயக கடமையை ஆற்றிட வேண்டும். மேலும் தங்கள் குடும்பத்தினர், அக்கம், பக்கத்தில் வசிப்பவர்களிடம் இதனை தெரிவித்து தேர்தலில் 100 சதவீதம் வாக்குகள் பதிவாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக தேர்தல் விழிப்புணர்வு குறித்து இன்னிசை கச்சேரி நடந்தது. அப்போது பெண்கள் பலர் பாடல்களுக்கு ஏற்ப நடனமாடி சந்தோஷத்தை வெளிப்படுத்தினர். நிகழ்ச்சியில், மகளிர் திட்ட உதவி அலுவலர்கள் திருமேனி, ஜெயகாந்தன், காந்தி, ரூபன், செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்