குடிநீர் வசதி செய்து தரக்கோரி திருவாடானை யூனியன் அலுவலகத்தில் காலிகுடங்களுடன் கிராம மக்கள் முற்றுகை நடவடிக்கை எடுப்பதாக அதிகாரி சமரசம்

குடிநீர் வசதி செய்து தரக்கோரி காலிகுடங் களுடன் நெட்டேந்தல் கிராம மக்கள் திருவாடானை யூனியன் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-03-20 22:45 GMT
தொண்டி,

திருவாடானை தாலுகா, நெய்வயல் ஊராட்சிக்கு உட்பட்ட நெட்டேந்தல் கிராமத்தை சேர்ந்த சுமார் 50 பெண்கள் உள்பட ஏராளமான பொதுமக்கள் குடிநீர் வசதி செய்து தரக்கோரி காலி குடங்களுடன் நேற்று காலை திருவாடானை யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அதன்பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்டெல்லா மேரியை சந்தித்து தங்களது கிராமத்திற்கு கடந்த 10 நாட்களாக குடிநீர் வினியோகம் தடைபட்டுள்ளது எனவும், உடனடியாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர்.

அதனை பெற்றுக்கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர் நெய்வயல் ஊராட்சியில் பழுதடைந்துள்ள ஆழ்குழாயை உடனடியாக சீரமைத்து பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் முறையாக நடைபெற உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். மேலும் நெட்டேந்தல் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கு கலெக்டரிடம் ஒப்புதல் பெற்று உடனடியாக உறை கிணறு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், 2,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைத்து அதன் மூலம் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார். அதனை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

அதன் பின்னர் அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:- நெட்டேந்தல் கிராமத்திற்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டம், கூட்டு குடிநீர் திட்டம் போன்றவை எதுவும் இல்லை. இதனால் நெய்வயல் கிராமத்தில் இருந்து அமைக்கப்பட்ட ஆழ்குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. அந்த தண்ணீரும் உப்புத் தன்மை கொண்டதாகவே இருக்கிறது. அதனை குடிக்க முடியாது. இதனால் லாரிகளில் விற்பனைக்காக கொண்டு வரப்படும் குடிநீரை ஒரு குடம் ரூ.12-க்கு விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகிறோம்.

எங்கள் கிராமத்தில் உள்ள மேல்நிலை தொட்டி பழுதடைந்து நீண்டகாலமாகி விட்டது. அது எப்போது இடிந்து விழும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் நடமாடி வருகிறோம். எனவே அதனை இடித்துவிட்டு புதிதாக மேல்நிலைத்தொட்டி கட்டி தரவேண்டும். மேலும் எங்கள் கிராமத்தில் உள்ள குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு தனியாக ஆழ்குழாய் அமைத்து தர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்