விபத்தில் கால் முறிவு, ஆம்புலன்சில் தேர்வு எழுதிய மாணவர்
வேடசந்தூர் அருகே விபத்தில் கால்முறிவு ஏற்பட்டதால் ஆம்புலன்சில் வைத்து 10-ம் வகுப்பு மாணவர் தேர்வு எழுதினார்.
வேடசந்தூர்,
வேடசந்தூர் அருகே உள்ள விட்டல்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பிச்சைமுத்து. அவருடைய மனைவி விஜயா. இவர்களது மூத்த மகன் பாலமுரளிகிருஷ்ணன் (வயது 15). இவர், வேடசந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று முன்தினம் மாலை பள்ளியில் 10-ம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு தனது ஊருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். வேடசந்தூர்-திண்டுக்கல் சாலையில் அரசு போக்குவரத்து பணிமனை அருகே சென்றபோது எதிரே வந்த வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பாலமுரளிகிருஷ்ணனின் இடது காலில் முறிவு ஏற்பட்டது.
இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்தநிலையில் நேற்று ஆங்கிலம் முதல் தாள் தேர்வு நடந்தது. இதற்காக மாணவர் ஆம்புலன்ஸ் மூலம் வேடசந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு வந்தார்.
ஆனால் தேர்வு நடக்கும் இடம் மாடியில் இருந்ததால் அங்கு அவரை அழைத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து மாணவரை ஆம்புலன்சில் இருந்தபடியே தேர்வு எழுத கல்வித்துறை அதிகாரிகள் அனுமதி அளித்தனர். உடன் வந்த உறவினர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவர் ஆகியோரை பள்ளி வளாகத்துக்கு வெளியே செல்ல கூறினார்கள். ஆம்புலன்சிலேயே பாலமுரளிகிருஷ்ணன் தேர்வு எழுதினார். அவரை கண்காணிக்க ஆசிரியர் ஒருவர் நியமிக்கப்பட்டார். கால் உடைந்து அறுவை சிகிச்சை செய்து கொண்டு பள்ளிக்கு தேர்வு எழுத வந்த மாணவரை சக மாணவர்களும், ஆசிரியர்களும் பாராட்டினர்.
இதுகுறித்து மாணவர் பாலமுரளிகிருஷ்ணன் கூறுகையில், ‘விபத்தில் கால் முறிந்த நிலையில் தேர்வு எழுத முடியாமல் போய்விடுமோ என்று பயந்தேன். கல்வித்துறை அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே தேர்வு எழுதியது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.