விருத்தாசலத்தில், கால்வாயில் கிடந்த பச்சிளம் குழந்தை மீட்பு
விருத்தாசலத்தில் கால்வாயில் கிடந்த பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டது.
விருத்தாசலம்,
விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் பின்புறம் கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்த கழிவுநீர் கால்வாயில் நேற்று காலையில் பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தை ஒன்று கிடந்தது. இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இதுபற்றி விருத்தாசலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இருப்பினும் அந்த குழந்தை யாருடையது என்பது தெரியவில்லை. இதையடுத்து அந்த குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அந்த குழந்தையை கால்வாயில் விட்டுச்சென்றவர் யார்? கள்ளத்தொடர்பில் பிறந்ததால் குழந்தையை விட்டு சென்றார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே இதுபற்றி அறிந்த கடலூர் மாவட்ட குழந்தைகள் மைய ஆலோசகர் பார்த்திபராஜ், விருத்தாசலம் சமூக நல விரிவாக்க அலுவலர் ஜெயபிரபா, ஊர்நல அலுவலர் பானுமதி ஆகியோர் மருத்துவமனைக்கு வந்து குழந்தையை மீட்டு தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்த்தனர்.