வெயிலின் தாக்கம் காரணமாக சாலையோரங்களில் தர்ப்பூசணி கடைகள் அதிகரிப்பு

புதுக்கோட்டையில் வெயிலின் தாக்கம் காரணமாக சாலையோரங்களில் தர்ப்பூசணி கடைகள் அதிகரித்து உள்ளன.;

Update: 2019-03-20 22:30 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் வறட்சியான மாவட்டம் ஆகும். இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக பருவமழை எப்போதும் பெய்யும் சராசரி மழையளவைவிட மிகவும் குறைவாக பெய்து உள்ளது. இந்நிலையில் கடந்த நவம்பர் 16-ந் தேதி கஜா புயல் தாக்கியதால், மாவட்டத்தில் உள்ள அதிகப்படியான மரங்கள் அழித்து விட்டன. இந்நிலையில் தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள குளங்கள், ஏரிகள் போன்றவை தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகின்றன. மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் பல இடங்களில் பணம் கொடுத்து தண்ணீர் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் மே மாதத்தில் தான் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருக்கும். ஆனால் இந்த ஆண்டு தற்போது மார்ச் மாதத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. இதேபோல புதுக்கோட்டை மாவட்டத்திலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளதால் மதிய வேளையில் புதிய பஸ் நிலையம், கீழராஜ வீதி போன்ற முக்கிய இடங்களில் கூட மக்களின் நடமாட்டம் குறைந்து உள்ளது. மேலும் வெளியே செல்லும் பொதுமக்கள் குடையை பிடித்து கொண்டும், சேலை மற்றும் துப்பட்டாவால் தலையை முடியவாறும் நடந்து செல்கின்றன.

வெயிலின் தாக்கம் அதிகளவில் உள்ளதால், இரவில் தூங்க முடியாமல் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து உள்ளனர். இதனால் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தை குறைக்க இளநீர், தர்ப்பூசணி, கரும்புச்சாறு மற்றும் குளிர் பானங்கள் போன்றவற்றை அதிக அளவில் வாங்கி குடிக்க தொடங்கி உள்ளனர். இதனால் புதுக்கோட்டையில் மன்னர் அரசு கல்லூரி முன்பு, டி.வி.எஸ்.கார்னர், பிருந்தாவனத்தில் இருந்து தஞ்சாவூர் செல்லும் சாலை, திருச்சி சாலை, மதுரை சாலை, பி.எல்.ஏ. ரவுண்டானா, கலெக் டர் அலுவலகம் அருகே ஆகிய பகுதிகளில் அளவுக்கு அதிகமாக சாலையோரங்களில் தர்பூசணி கடைகள் தொடங்கப்பட்டு உள்ளன.

இதைப்போல இளநீர் கடைகளும் அதிகரித்து உள்ளன. ஒரு கிலோ தர்ப்பூசணி ரூ.20 வரை விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் ஒரு பிளேட் தர்ப்பூசணி ரூ.10 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்படுகின்றன. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கல்லூரியை முடித்து விட்டு வீட்டிற்கு செல்வதற்கு முன்பு தர்ப்பூசணியை வாங்கி சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு செல்கின்றன. இது குறித்து தர்ப்பூசணி வியாபாரி ஒருவர் கூறுகையில், தமிழகத்தில் தற்போதே வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. இதனால் தற்போது தர்ப்பூசணி விற்பனை அதி கரித்து உள்ளது. இந்த நிலையில் வருகிற மே மாதத்தில் புதுக்கோட்டையில் சுமார் 100 டிகிரி முதல் 115 டிகிரி வரை வெயில் அடிக்க வாய்ப்பு உள்ளது. அப்போது பல மடங்கு தர்ப்பூசணி மற்றும் இளநீர் விற்பனை அதிகரிக்கும் என கூறினார். இதேபோல் ஆவுடையார்கோவில் கடை வீதியில் சரக்கு வேனில் வைத்து தர்ப்பூசணி பழங்களை விற்பனை செய்து வருகின்றனர். 

மேலும் செய்திகள்