மேட்டுப்பாளையம் அருகே, கல்குவாரி உரிமையாளரிடம் ரூ.3¼ லட்சம் பறிமுதல் - தேர்தல் கண்காணிப்பு குழுவினர் நடவடிக்கை
மேட்டுப்பாளையம் அருகே கல்குவாரி உரிமையாளரிடம் ரூ.3¼ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. தேர்தல் கண்காணிப்பு குழுவினர் நடத்திய வாகன சோதனையில் சிக்கியது.
மேட்டுப்பாளையம்,
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 18-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு பணபட்டுவாடா செய்வதை தடுக்க பறக்கும் படைகள், கண்காணிப்பு குழுவினர் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தல் விதிமுறையின்படி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு செல்பவர்கள் கட்டாயமாக உரிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும். உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்- அன்னூர் சாலையில் தென்திருப்பதி நால்ரோடு பிரிவில் இருந்து காரமடை செல்லும் வழியில் உள்ள சின்னதொட்டிபாளையத்தில் காரமடை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியே வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் காரமடை அருகே பெள்ளாதியை சேர்ந்த கல்குவாரி உரிமையாளர் பிரீத்தி என்பவர் இருந்தார். அவர் வைத்து இருந்த கைப்பையில் ரூ.3 லட்சத்து 26 ஆயிரத்து 500 இருந்தது.
இந்த பணத்துக்கான உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லை. இதையடுத்து அந்த பணத்தை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்து, கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும் தாசில்தாருமான புனிதாவிடம் ஒப்படைத்தனர்.