‘தேர்தல் அறிக்கையில் உள்ள அனைத்தையும் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றுவார்’ கனிமொழி எம்.பி. பேச்சு
‘தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள அனைத்தையும் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றுவார்’ என்று கனிமொழி எம்.பி. பேசினார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தலைமை தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நேற்று மாலை தூத்துக்குடியில் நடந்தது. தி.மு.க. வேட்பாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு, திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தூத்துக்குடி,
நான் தூத்துக்குடிக்கு வந்த உடன், மக்களின் அன்பிலும், கூட்டணி கட்சிகள் தந்து இருக்கும் ஆதரவிலும் திக்குமுக்காடி போனேன். வரும் வழியில் எல்லாம் இங்கு ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று மக்கள் ஒரு எதிர்பார்ப்போடு இருக்கும் அந்த மனநிலையை காணும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது இந்த நாட்டில் யாரும் பாதுகாப்போடு வாழ முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம்.
மதத்தின் பெயரால், சாதியின் பெயரால், மக்களை வேறுபடுத்தி அரசியல் செய்யக்கூடிய ஒரு நிலையை பா.ஜனதா மற்றும் அதன் அங்கங்களாக இருக்கக்கூடிய ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகள் சேர்ந்து உருவாக்கி கொண்டு இருக்கிறார்கள். அவர்களின் கருத்துகளை தந்தை பெரியார் பூமியில் விதைக்கும் கருவியாக அ.தி.மு.க. மாறி கொண்டு இருக்கிறது.
இதனால் தமிழ்நாட்டை நாம் காப்பாற்ற வேண்டும். இந்த இந்திய நாட்டையும் காப்பாற்ற வேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. ஜி.எஸ்.டி.யால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். தற்போது அவர்கள் இந்த நாட்டுக்கு காவல்காரர்கள் என்று பெருமை பேசுகிறார்கள். இது வேதனையாக இருக்கிறது. இவர்களின் ஒரே நோக்கம் அவர்கள் ஆட்சியில் இருக்க வேண்டும். பதவியில் இருக்க வேண்டும். அதற்காக அவர்கள் யாரையும் விலையாக கொடுக்கவும், யாரையும் காவு கொடுக்கவும் தயங்க மாட்டார்கள்.
இந்த நாட்டை காப்பாற்ற வேண்டும் என்றால், மக்களின் அடிப்படை உரிமைகளை காப்பாற்ற வேண்டும் என்றால் இந்த தேர்தலில் ஒரு மாற்றம் வர வேண்டும். பா.ஜனதா ஆட்சி தூக்கி எறியப்பட்டு காங்கிரஸ் தலைமையிலான ஒரு ஆட்சி மத்தியில் வர வேண்டும். நாட்டின் பிரதமராக ராகுல்காந்தி வரக்கூடிய சூழலை நாம் அனைவரும் இணைந்து உருவாக்க வேண்டும்.
தலைவர் கலைஞர் கருணாநிதி மக்களுக்கு தந்த வாக்குறுதிகளை நிறைவேற்றி காட்டியவர். யாரையெல்லாம் சமூகம் ஒதுக்கியதோ அவர்களுக்காக வாழ்ந்தவர் தலைவர் கலைஞர். அவரின் வழியிலே தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் கூறி உள்ள அனைத்தையும் நிறைவேற்றி தருவார். பெட்ரோல் விலை கட்டுப்படுத்தப்படும், நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று உறுதி அளித்து உள்ளார். நாம் அடைந்து இருக்கும் துன்பங்களை துடைத்து எறிய வேண்டும் என்றால் தமிழர்களின் துயர் துடைக்க, தமிழர்களை புரிந்து கொள்ளக்கூடிய அரசு மத்தியில் அமைய வேண்டும். தமிழ் மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு உள்ள மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக வர வேண்டும்.
எனக்கு இந்த தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்து உள்ளார்கள். கலைஞர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் வழியிலே நான் இந்த தொகுதி மக்களுக்கு பணியாற்றுவேன். தூத்துக்குடியில் பல வாய்ப்புகள் உள்ளன. அந்த வாய்ப்புகளை பயன்படுத்தும் நிலை இன்னும் உருவாகவில்லை. தூத்துக்குடியில் சுற்றுலாத்துறை மேம்படுத்தப்படும். சுற்றுச்சூழலை பாதிக்காத தொழிற்சாலைகள் அமைக்கப்படும். விவசாயம் சார்ந்த தொழில்களை கொண்டு வர முடியும். கல்விக்கான மாவட்டமாக மாற்ற முடியும். இதனை உங்கள் உதவியோடு நிச்சயமாக செய்வேன் என்று உறுதி அளிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.