எலெக்ட்ரீசியனை கொலை செய்த மனைவி கள்ளக்காதலனுடன் கைது

திருப்பூரில் எலெக்ட்ரீசியனை கொலை செய்த மனைவி, கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2019-03-19 23:45 GMT
திருப்பூர்,

திருப்பூர் காலேஜ் ரோடு வசந்தம் நகர் பகுதியை சேர்ந்தவர் ரஜினி (வயது 40). எலெக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி செல்வி(35). இவர் அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

அதே பனியன் நிறுவனத்தில் செல்வியின் வீட்டின் அருகே உள்ள வீரமணி(34) என்பவரும் வேலை செய்து வந்துள்ளார். இவர்களுக்கு இடையே முதலில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். வீரமணி அவ்வப்போது செல்வியின் வீட்டிற்கு சென்று வந்துள்ளார்.

இந்த தகவல் ரஜினிக்கு தெரியவந்துள்ளது. இதனால் கள்ளக்காதலை கைவிடும் படி தனது மனைவியிடம் கூறியுள்ளார். ஆனால் தொடர்ந்து அவர் வீரமணியுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். இதில் விரக்தி அடைந்த ரஜினி கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதையடுத்து செல்வி, சிறிது காலம் கள்ளக்காதலன் வீரமணியுடன் தொடர்பை நிறுத்தி விட்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளார். ஆனால் சில மாதங்களிலேயே மீண்டும் வீரமணியுடன் பேச ஆரம்பித்துள்ளார்.

தொடர்ந்து அவர்கள் அடிக்கடி தனிமையில் இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில், ரஜினி வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். செல்வி வீட்டில் இருந்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இரவு அங்கு வந்த வீரமணி, செல்வியுடன் தனிமையில் இருந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென ரஜினி அங்கு வந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், வீரமணியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது வாக்குவாதம் முற்றி இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த வீரமணி அருகில் கிடந்த கத்தியை எடுத்து ரஜியின் மார்பில் பலமாக குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர், அலறியபடி ரத்த வெள்ளத்தில் அங்கு விழுந்தார்.

இதையடுத்து அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்படாமல் இருப்பதற்காக, ரஜினி தன்னைத்தானே கத்தியால் குத்தி விட்டதாக அக்கம் பக்கத்தினரிடம் நாடகம் ஆடியுள்ளார். பின்னர் செல்வியும், கள்ளக்காதலன் வீரமணியும் இணைந்து படுகாயத்துடன் கிடந்த ரஜினியை மீட்டு, திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கும், குடும்ப பிரச்சினை காரணமாக தன்னை தானே ரஜினி கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயன்றதாகவும் டாக்டர்களிடம் செல்வி தெரிவித்துள்ளார்.

இதற்குள் சிகிச்சையில் இருந்த ரஜினி சிறிது நேரத்திலேயே பரிதாபமாக இறந்தார். இறந்த தகவல் தெரிந்ததும், ஆஸ்பத்திரியில் நின்று கொண்டிருந்த செல்வி, அவருடைய கள்ளக்காதலன் வீரமணி ஆகியோர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். இதனால் சந்தேகம் அடைந்த அங்கு நின்ற உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அவர்கள் இருவரை பிடித்து அடித்து உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். போலீசார் அவர்களை பிடித்து தீவிர விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் செல்வி தனது கள்ளக்காதலன் வீரமணியுடன் சேர்ந்து ரஜினியை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து இவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவி தனது கள்ளக்காதலனுடன் இணைந்து, கணவனை கொலை செய்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்