காசிமேட்டில் படப்பிடிப்பு விஜய் ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி
காசிமேட்டில் நடந்த படப்பிடிப்பில் நடிகர் விஜய் ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவொற்றியூர்,
நடிகர் விஜய் நடிக்கும் புதிய படத்தை டைரக்டர் அட்லி இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை பகுதியில் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. காசிமேடு மீன்பிடி துறைமுக கடற்கரையில் ‘செட்’ அமைக்கப்பட்டு நேற்று முன்தினம் இரவு படப்பிடிப்பு நடந்தது. இதில் நடிகர் விஜய் கலந்துகொண்ட காட்சி படமாக்கப்பட்டது.
ரசிகர்கள் அனைவரும் கடற்கரையில் நிறுத்தப்பட்டு இருந்த விசைப்படகுகள் மற்றும் பாறைகள் மீது ஏறி நின்று நள்ளிரவு வரை படப்பிடிப்பை வேடிக்கை பார்த்தனர். சிலர் தடுப்பை மீறி உள்ளே செல்ல முயன்றனர்.
நேரம் செல்ல செல்ல ரசிகர்களை கட்டப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ரசிகர்கள் அனைவரும் கூச்சல் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் ரசிகர்கள் மீது லேசான தடியடி நடத்தினர். அப்போது ரசிகர்கள் ஓடியதால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து ரசிகர்கள் சிலர் கூறுகையில், ‘நடிகர் விஜயை பார்க்க மாலை 4 மணியில் இருந்து காத்து கொண்டிருந்தோம். ஆனால் பார்க்கவிடாமல் அடித்து துரத்துகின்றனர். நாங்கள் யாருக்கும், எந்த சிரமமும் கொடுக்காமல் விஜயை பார்க்க காத்திருந்தோம். ஆனால் பாதுகாப்பு பிரச்சினை என்று கூறி எங்களை போலீசார் அடித்து விரட்டி விட்டனர்’ என்று தெரிவித்தனர்.