நீதிபதி கண் எதிரே மனைவியை கத்தியால் குத்திய கணவர் ஐகோர்ட்டில் பரபரப்பு

விவாகரத்து கிடைக்காமல் வழக்கு இழுத்தடிக்கப்பட்டதால், நீதிபதி கண் எதிரே மனைவியை கத்தியால் குத்திக்கொலை செய்ய முயன்ற அரசு பஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-03-19 23:30 GMT
சென்னை,

காஞ்சீபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்துள்ள சிறுவஞ்சூர் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். (வயது 44). மாநகர அரசு போக்குவரத்துக்கழகத்தின் டிரைவராக வேலை செய்கிறார். இவருக்கும், சென்னையை சேர்ந்த வரலட்சுமி என்பவருக்கும் திருமணம் நடந்தது.

சில மாதங்களில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்கின்றனர். கடந்த 2009-ம் ஆண்டு விவாகரத்து கேட்டு சரவணன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு முதலாவது கூடுதல் குடும்பநல கோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது.

சரவணன் விவாகரத்து கேட்டதால், அவரிடம் வரலட்சுமி ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த கோர்ட்டு இடைக்கால ஜீவனாம்சமாக ரூ.1 லட்சத்து 65 ஆயிரம் வழங்க உத்தரவிட்டது.

இதை எதிர்த்து சரவணன் மனு தாக்கல் செய்தார். இந்த நிலையில், இந்த வழக்கு 1-வது கூடுதல் குடும்பநல கோர்ட்டில் நீதிபதி இளங்கோவன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. சரவணனும், வரலட்சுமியும் கோர்ட்டில் ஆஜராகினர்.

இவர்களது ஜீவனாம்சம் தொடர்பான மனுவை நீதிபதி விசாரணைக்கு எடுத்தார். அப்போது, இருதரப்பு வக்கீல்களும் காரசாரமாக வாதம் செய்ததால், சிறிது நேரத்துக்கு விசாரணையை நீதிபதி தள்ளிவைத்தார். கோர்ட்டு அறையில் உள்ள முதல் வரிசை பெஞ்சில் வரலட்சுமி உட்கார்ந்து இருந்தார். சரவணன் பின்னால் உள்ள மற்றொரு பெஞ்சில் உட்கார்ந்து இருந்தார். சுமார் 11.50 மணியளவில் திடீரென சரவணன் ஆவேசம் அடைந்தவராக எழுந்தார். இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, வரலட்சுமி மார்பில் குத்தினார்.

அப்போது கோர்ட்டில் இருந்த வக்கீல் ஆர்.கிருஷ்ணமூர்த்தி உள்பட சிலர் பாய்ந்து சென்று சரவணனை பிடித்தனர். ஆனால், அவர் திமிறிக்கொண்டு வரலட்சுமி மார்பில் மறுபடியும் குத்தினார்.

சரவணனின் கையை வக்கீல்கள் பிடிக்க முயற்சித்தபோது, 3-வது முறையாக வரலட்சுமியின் கழுத்தில் கத்தியால் வெட்டினார். இதையடுத்து வக்கீல்கள் அவரை சுற்றி வளைத்து பிடித்து, தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார், சரவணனை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

இந்த சம்பவம் நீதிபதி கண் முன்னே நடந்ததாகவும், கத்தியால் மனைவியை கணவன் குத்தியதைக் கண்டு கோர்ட்டில் இருந்து ஆண்களும், பெண்களும் அலறி அடித்துக்கொண்டு ஓடியதாகவும் அங்கிருந்த வக்கீல்கள் கூறினர்.

பிடித்து செல்லப்பட்ட சரவணனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, ‘கடந்த 2009-ம் ஆண்டு முதல் இந்த விவாகரத்து வழக்குக்காக கோர்ட்டுக்கு அலைகிறேன். விவாகரத்து கிடைத்தபாடில்லை. வரலட்சுமியும் ஜீவனாம்சம் கேட்டு மனு மேல் மனு போட்டு, வழக்கை இழுத்தடிக்கிறார். வயதும் ஆகிக்கொண்டே இருக்கிறது. புதிய வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியவில்லை. என் வாழ்க்கையே நாசமாகி போனதால், வரலட்சுமியை கொலை செய்ய முடிவு செய்தேன்.

கத்தியை மறைத்து வைத்து ஐகோர்ட்டு வளாகத்துக்குள் சென்றேன். அவரை குத்தி கொலை செய்ய முயலும்போது, அங்குள்ளவர்கள் தடுத்து விட்டனர்’ என்று கூறினார். அவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ஐகோர்ட்டு வளாகத்தில், ஐகோர்ட்டுகள் உள்ள பகுதிக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களும், மாவட்ட செசன்சு கோர்ட்டு பகுதியில் தமிழக போலீசாரும் பாதுகாப்பு வழங்குகின்றனர். தமிழக போலீசார் கவனக்குறைவினால் தான், ஐகோர்ட்டு வளாகத்துக்குள் கத்தியுடன் சரவணன் கோர்ட்டுக்குள் வந்துள்ளார். இதுகுறித்து உயர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மறுபக்கம் சம்பவம் நடந்த இடத்தை முதன்மை குடும்பநல கோர்ட்டு நீதிபதி ரஹமத்அலி பார்வையிட்டார். பின்னர், சம்பவம் குறித்து ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கு அறிக்கை அனுப்பினார்.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த வக்கீல் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, ‘சென்னையில் 3 குடும்பநல கோர்ட்டுகள் தான் சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது. விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்ததால், ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன் உத்தரவின்படி, 5 புதிய குடும்பநல கோர்ட்டுகள் உருவாக்கப்பட்டன. இப்போது 8 குடும்பநல கோர்ட்டுகள் இருந்தாலும், 5 நீதிபதிகள் தான் உள்ளனர். 3 இடங்கள் காலியாக உள்ளன. அதனால், அந்த 3 கோர்ட்டுகளின் வழக்குகள், 5 கோர்ட்டுகளுக்கு பிரித்து அனுப்பப்படுகிறது. இதனால், நீதிபதிகளுக்கு பணி சுமை ஏற்படுகிறது.

வழக்குகளை விரைவாக விசாரிக்க முடியாமல், வேறு ஒரு தேதிக்குத்தான் தள்ளிவைக்கின்றனர். இதனால், முதல் திருமணத்தில் பிரச்சினையில் சிக்கிய தம்பதியர்களால், விரைவாக விவாகரத்து கிடைக்காமலும், சந்தோசமான புதிய வாழ்க்கையை தொடங்க முடியாமலும், அவர்களது இளமை காலங்கள் வீணாகிறது. அதனால், ஏற்பட்ட மனஉளைச்சலில், இதுபோன்ற சம்பவம் நடக்கின்றன’ என்றார்.

மேலும் செய்திகள்