பொள்ளாச்சி பாலியல் வழக்கு, காணொலி காட்சி மூலம் திருநாவுக்கரசுக்கு காவல் நீட்டிப்பு

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான திருநாவுக்கரசுக்கு, காணொலி காட்சி மூலம் காவல் நீட்டிக்கப்பட்டது.

Update: 2019-03-19 23:30 GMT
கோவை,

பொள்ளாச்சி பாலியல் வன்முறை வழக்கில், திருநாவுக்கரசு (வயது 27), இவருடைய கூட்டாளிகள் சபரிராஜன் (25), சதீஷ் (29), வசந்தகுமார் (24) ஆகிய 4 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். திருநாவுக்கரசை, சி.பி.சி.ஐ.டி. போலீசார் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அதன்பிறகு அவர் சிறையில் அடைக் கப்பட்டார். இந்த வழக்கில் கைதான திருநாவுக்கரசு தவிர மற்ற 3 பேரும் கடந்த 25.2.2019 அன்று கைது செய்யப்பட்டனர். திருநாவுக்கரசு கடந்த 5-ந் தேதி கைது செய்யப்பட்டார். திருநாவுக்கரசுக்கான நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்தது.

இந்த நிலையில், திருநாவுக்கரசை நேரடியாக கோர்ட்டுக்கு கொண்டு வந்தால், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று கருதி, கோவை சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் திருநாவுக்கரசு, கோவை தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி நாகராஜனிடம் நேற்று மாலை ஆஜர்படுத்தினார்கள். இதையடுத்து திருநாவுக்கரசுக்கு 15 நாட்கள் காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

திருநாவுக்கரசிடம், சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையில் அவர் சில தகவல்களை கூறியுள்ளார். அதன் அடிப்படையில் மேலும் சிலர் இந்த வழக்கில் சிக்குவார்கள் என்று தெரிகிறது. இதற்கிடையில் கைதான சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகிய 3 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்