கோவை, பொள்ளாச்சி தொகுதிகளில் போட்டியிட முதல் நாளில் 2 சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்

கோவை, பொள்ளாச்சி தொகுதிகளில் போட்டியிட முதல் நாளில் 2 சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர்.

Update: 2019-03-19 22:45 GMT
கோவை,

நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்று தொடங்கியது. கோவை நாடாளுமன்ற தொகுதிக்கு மாவட்ட கலெக்டர் அலு வலகம், மாநகராட்சி துணை ஆணையர் அலுவலகத்திலும், பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு கோவை மாவட்ட கலெக்டர் அலு வலகத்தில் உள்ள மாவட்ட வருவாய் அலுவலர், பொள்ளாச்சி சப்-கலெக்டரிடமும் வேட்பு மனுதாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப் பட்டு உள்ளது. எனவே அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

முதல் நாளான நேற்று கோவை நாடாளுமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட கோவை காளப்பட்டியை சேர்ந்த விவசாயி வசந்தகுமார் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவர், கோவையில் ஒரு விரல் புரட்சி தொடங்க வேண்டும் என்ற நோக்கில் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளதாகவும், கோவை நாடாளுமன்ற தொகுதி மக்களுக் கான வேலைக்காரன் தேர்வு இது என்றும் கூறினார்.

கோவை சுந்தராபுரத்தை சேர்ந்தவர் நூர்முகமது. இவர் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக தனது ஆதரவாளர்கள் 4 பேரை தள்ளுவண்டியில் ஏற்றி இழுத்துக்கொண்டு வந்தார்.

கோவை கலெக்டர் அலுவலகத்துக்குள் தள்ளுவண்டியுடன் செல்ல முயன்ற அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அவர் தள்ளுவண்டியை கலெக்டர் அலுவலகம் அருகே நிறுத்தி விட்டு தனது ஆதரவாளர்களுடன் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் அலுவலர் ராமதுரைமுருகனிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவர் நிருபர்களிடம் கூறுகையில், நான் ஆண்டிபட்டி, மதுரை மேற்கு, ஆர்.கே.நகர் என இதுவரை 29 முறை தேர்தல்களில் போட்டியிட்டு உள்ளேன்.

பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப் பட்ட பெண்களுக்காக குரல் கொடுக்கும் வகையில் தள்ளுவண்டியில் வந்து மனு தாக்கல் செய்தேன் என்றார்.

மேலும் செய்திகள்