வாக்களிப்பதன் அவசியம் குறித்து நூதன முறையில் விழிப்புணர்வு

தேர்தலில் ஒவ்வொரு வாக்காளரும் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து தேர்தல் ஆணையம் பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

Update: 2019-03-18 22:30 GMT
சமயபுரம்,

தமிழகம் முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஒவ்வொரு வாக்காளரும் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து தேர்தல் ஆணையம் பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் நேற்று மண்ணச்சநல்லூரில் கூடிய வாரச்சந்தையில் காய்கறி, பழங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வந்த சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டிய அவசியம் குறித்து நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் ஆள்காட்டி விரலில் மை இடப்பட்ட படம் மற்றும் ‘இந்த மை நமது தேசத்தின் வலிமை’ என்றும், ‘வாக்களிப்பது ஒவ்வொருவரின் கடமை’ என்றும் பிரசுரம் செய்யப்பட்ட துணிப்பைகளை மக்களிடம், அதிகாரிகள் கொடுத்தனர். இதில் மண்ணச்சநல்லூர் தாசில்தார் ராஜேஷ் கண்ணன் தலைமையில் மண்டல துணை தாசில்தார் சங்கர நாராயணன், வட்ட வழங்கல் அலுவலர் மூர்த்தி, வருவாய் ஆய்வாளர்கள் ரவிச்சந்திரன், வனிதா மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டு, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பொதுமக்களுக்கு துணிப்பை வழங்கியது, தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், பிளாஸ்டிக் பைகளை தவிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகவும் இருந்தது. 

மேலும் செய்திகள்