சுற்றுலா பயணிகளாக கருதி மாஞ்சோலை மக்களிடம் வனத்துறை நுழைவு கட்டணம் வசூலிக்க கூடாது “தேர்தலை புறக்கணிப்போம்” என தொழிற்சங்க கூட்டத்தில் தீர்மானம்
சுற்றுலா பயணிகளாக கருதி, மாஞ்சோலை மக்களிடம் வனத்துறை நுழைவு கட்டணம் வசூலிக்க கூடாது என்று அனைத்து தொழிற்சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அம்பை,
மாஞ்சோலையில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் அனைத்து தொழிற்சங்க கூட்டம் நடைபெற்றது. வக்கீல் பாலசந்தர் தலைமை தாங்கினார். ஐ.என்.டி.யு.சி. தொழிற்சங்க தலைவர் ராமலிங்கம், அ.தி.மு.க. தொழிற்சங்க தலைவர் சரவணமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
மணிமுத்தாறு பகுதியில் இருந்து தலையணை வரை உள்ள ரோடு, அதற்கு மேல் செல்லும் ஊத்து பகுதி வரையிலான ரோடும் மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் பஸ்கள் அடிக்கடி பழுதடைந்து போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. எனவே இந்த ரோட்டை உடனடியாக சீரமைக்க வேண்டும்.
மாஞ்சோலை தேயிலை தோட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளையும் சேர்த்து மணிமுத்தாறு நகரப்பஞ்சாயத்து உட்பட்டு 5 வார்டுகள் உள்ளன. இங்கு 3 ஆயிரம் மக்கள் நிரந்தர குடியுரிமை பெற்று ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை வைத்துள்ளனர்.
இருந்த போதிலும் மாஞ்சோலையில் இருந்து கீழே மணிமுத்தாறு பகுதிக்கு வந்து செல்லும் குடிமக்களிடமும், சுற்றுலா பயணிகளாக கருதி மணிமுத்தாறு சோதனை சாவடியில் எங்களது வாகனங்களுக்கு நுழைவு கட்டணமாக ரூ.950 வசூலிக்கப்படுகிறது. இதனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.
நாலுமுக்கு சோலை மரப்பாலம் பராமரிப்பு வேலை நடந்து 1 மாதத்துக்கு மேல் ஆகியும் முடிக்கப்படவில்லை. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே காலதாமதம் ஏற்படாமல் விரைவில் பாலப்பணியை முடிக்க வேண்டும்.
இந்த கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி தர வேண்டும். இல்லாவிட்டால் வருகிற நாடாளுமன்ற தேர்தலை அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் புறக்கணிப்போம்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் தொ.மு.ச. பொது செயலாளர் ஜெயபால் உள்பட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.