நெல்லை அருகே அரசு பஸ்சில் இருந்து கீழே விழுந்த கண்டக்டர் சாவு

நெல்லை அருகே அரசு பஸ்சில் இருந்து கீழே விழுந்த கண்டக்டர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

Update: 2019-03-18 21:45 GMT
நெல்லை, 

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் பெருமாள் கோவில் கீழத்தெருவை சேர்ந்தவர் சுந்தர மகாலிங்கம் (வயது 48). இவர் நெல்லை அரசு போக்குவரத்து கழகம் தாமிரபரணி பணிமனையில் கண்டக்டராக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று இவர் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து பாபநாசம் நோக்கி சென்ற அரசு பஸ்சில் கண்டக்டராக இருந்தார்.

நெல்லை அருகே உள்ள மேலப்பாளையத்தை கடந்து கருங்குளம் பகுதியில் பஸ் சென்று கொண்டிருந்த போது பஸ்சின் படிக்கட்டு அருகில் நின்றவாறு பயணிகளுக்கு சுந்தர மகாலிங்கம் டிக்கெட் வழங்கிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் பஸ்சில் இருந்து படிக்கட்டு வழியாக வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதில் பலத்த காயம் அடைந்த அவர் உடனடியாக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் சுந்தர மகாலிங்கம் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்