பாலக்கோடு அருகே வாகன சோதனையில் ரூ.1.95 லட்சம் பறிமுதல்
பாலக்கோடு அருகே வாகன சோதனையில் ரூ.1.95 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.;
பாலக்கோடு,
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாசில்தார் ராஜா, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அஜய் சீனிவாசன் மற்றும் பறக்கும் படையினர் ஆரதஅள்ளி கூட்ரோடு பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வெள்ளிச்சந்தை பகுதியில் இருந்து காரிமங்கலம் நோக்கி வந்த காரை நிறுத்தி பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். அப்போது காரில் ரூ.1 லட்சத்து 95 ஆயிரம் இருந்தது.
இதுகுறித்து காரில் வந்த 2 பேரிடம் பறக்கும் படையினர் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் காரிமங்கலம் அருகே உள்ள பொம்மஅள்ளியை சேர்ந்த பிரபு, விஜயன் என்பது தெரியவந்தது. இவர்கள், ஓசூர் பகுதியில் துணி வியாபாரம் செய்து வந்ததும், வியாபார விஷயமாக பணம் கொண்டு சென்றதும் தெரியவந்தது.
ஆனால் அவர்கள் கொண்டு சென்ற ரூ.1 லட்சத்து 95 ஆயிரத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை பாலக்கோடு சார்நிலை கருவூலத்தில் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர். உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தை திரும்ப பெற்று செல்லுமாறு பறக்கும் படை அலுவலர்கள் தெரிவித்தனர்.