இருப்பிடத்தை தெளிவாக கூறிவிட்டு போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்யாதது ஏன்? என்று கேட்டு கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-03-17 23:57 GMT
கோவை,

கோவை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த 15-ந் தேதி இரவு 11.30 மணியளவில் செல்போனில் இருந்து ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய ஆசாமி ‘பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பலருக்கு தொடர்பு இருக்கும் போது 4 பேரை மட்டும் கைது செய்தது ஏன்? அனைவரையும் கைது செய்யாதது ஏன்?. சரியான நடவடிக்கை எடுக்காததால் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருக்கிறேன். சிறிது நேரத்தில் அது வெடிக்கும். முடிந்தால் எடுங்கள்’ என்று மிரட்டல் விடுத்தார்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த ஆசாமியிடம் ‘நீங்கள் எங்கிருந்து பேசுகிறீர்கள்?’ என்று கேட்டனர். அதற்கு அந்த ஆசாமி எனது பெயர் மார்ட்டின் மரியதாஸ். கோவை சவுரிபாளையம் கல்லறை தெருவில் உள்ள ஒரு பேக்கரி அருகே நின்று பேசுகிறேன்’ என்று தான் இருக்கும் இடத்தை தெளிவாக கூறி விட்டு போனை வைத்து விட்டார்.

அந்த ஆசாமி உளறலுடன் பேசியதால் அவர் மது அருந்தி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் அந்த ஆசாமி குறிப்பிட்ட இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அந்த பேக்கரி அருகில் 2 பேர் தகராறு செய்து கொண்டிருந்தனர். உடனே அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

இதில் அவர்களில் ஒருவர் பெயர் மார்ட்டின் மரியதாஸ் (வயது 30), சவுரிபாளையம் கல்லறை தெரு அன்னை வேளாங்கண்ணி நகரை சேர்ந்தவர் என்பதும், மற்றொருவர் ஒண்டிப்புதூரை சேர்ந்த விக்னேஷ் (30) என்பதும் தெரியவந்தது.

போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு செல்போனில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மார்ட்டின் மரியதாஸ் பேசியதை அருகே நின்றிருந்த விக்னேஷ் தட்டிக்கேட்டு உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவரை மார்ட்டின் மரியதாஸ் தகாத வார்த்தைகளால் திட்டி தகராறு செய்து கொண்டிருந்த போது தான் போலீசார் அங்கு சென்றனர்.

இதைத்தொடர்ந்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மார்ட்டின் மரியதாசிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை ஒப்புக் கொண்டார்.

அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 507 (தேவையற்ற அழைப்புகள் மூலம் பீதியை ஏற்படுத்துதல்), 506 (1) கொலை மிரட்டல் விடுத்தல் மற்றும் பொது இடத்தில் அநாகரீகமாக நடந்து கொள்ளுதல் ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்